ADDED : ஜூன் 09, 2025 02:38 AM

மதுார்:உத்திரமேரூர் ஒன்றியம், மதுார் கிராமத்தில், ஏரிக்கரை அருகே ராம பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன், இப்பகுதியினர் மத்தியில் குரங்கு ஒன்று நெருங்கி பழகி வந்ததாகவும், அந்த குரங்கு திடீரென ஒரு நாள் அப்பகுதி ஏரிக்கரை மீது இறந்து கிடந்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த குரங்கு நினைவாக, மதுார் ஏரிக்கரை அருகே, இந்த ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலை கட்டி அப்பகுதியினர் வழிபட்டு வருகின்றனர்.
இக்கோவிலில், இந்தாண்டிற்கான வைகாசி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. காலை 5:00 மணிக்கு, மஹா சாந்தி ஹோமம், காலை, 6:00 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது.
மாலை 6:00 மணிக்கு, ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
அப்போது, மதுார் பஜனை கோஷ்டியினர் ராமர், லட்சுமணன், ஆஞ்சநேயர் வேடமிட்டு, அவர்களது புகழ் பாடினர்.
அதை தொடர்ந்து மலர் அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.