/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நுாலக பணிக்காக இடிக்கப்பட்ட சுற்றுச்சுவர் அரசு பள்ளியில் அத்துமீறும் சமூக விரோதிகள்
/
நுாலக பணிக்காக இடிக்கப்பட்ட சுற்றுச்சுவர் அரசு பள்ளியில் அத்துமீறும் சமூக விரோதிகள்
நுாலக பணிக்காக இடிக்கப்பட்ட சுற்றுச்சுவர் அரசு பள்ளியில் அத்துமீறும் சமூக விரோதிகள்
நுாலக பணிக்காக இடிக்கப்பட்ட சுற்றுச்சுவர் அரசு பள்ளியில் அத்துமீறும் சமூக விரோதிகள்
ADDED : நவ 06, 2025 11:28 PM

ஸ்ரீபெரும்புதுார்: மொளச்சூர் அரசு பள்ளி வளாகத்தில் ஊர்ப்புற நுாலகம் அமைக்க, ஒராண்டிற்கு முன் இடிக்கப்பட்ட பள்ளி சுற்றுச்சுவர் சீரமைக்கப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளதால், இரவு நேரங்களில் மது அருந்துதல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் சமூக விரோதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், சுங்குவார்சத்திரம் அருகே உள்ள மொளச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.
அரசு பள்ளி வளாகத்தில், பொது நுாலகத் துறை சார்பில், ஊர்ப்புற நுாலகம் அமைக்க, ஒப்பந்ததாரரால் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு, கடந்த ஆண்டு நுாலக கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
நுாலக கட்டுமான பணிகள் நிறைவடைந்ததும், இடிக்கப்பட்ட சுற்றுச்சுவரை மீண்டும் கட்டிதருவதாக ஒப்பந்ததாரர் உறுதி அளித்ததாக கூறப் படுகிறது.
இந்த நிலையில், 20 அடி நீளத்திற்கு இடிக்கப்பட்ட சுற்றுச்சுவர் தற்போது வரை சீரமைக்கப்படாமல் அப்படியே விடப்பட்டு உள்ளது. இதனால், மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகள் பள்ளியின் உள்ளே நுழைந்து மாணவ - மாணவியரை அச்சுறுத்தும் வகையில் திரிகின்றன. மேலும், பள்ளி வளாகம் முழுதும் கால்நடைகள் அசுத்தம் செய்கின்றன.
குறிப்பாக, இரவு நேரங்களில் சுற்றுச்சுவர் இன்றி திறந்த வெளியில் உள்ள பள்ளி வளாகத்தின் உள்ளே நுழையும் சமூக விரோதிகள், மது அருந்துதல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், மறுநாள் காலையில் பள்ளிக்கு வரும் மாணவ - மாணவியர் மிகுந்த மன உளைச்சல் அடைகின்றனர். சமூக விரோதிகளின் புகலிடமாக அரசு பள்ளி மாறி வருவதாக, மாணவ - மாணவியரின் பெற்றோர் மற்றும் பொது மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
எனவே, அரசு பள்ளி வளாகத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்க, இடிக்கப்பட்ட பள்ளி சுற்றுச்சுவரை மீண்டும் அமைத்து, நுாலகத்திற்கு செல்ல சிறிய இரும்பு 'கேட்' அமைத்திட, பள்ளி கல்வித் துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவ - மாணவியரின் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

