/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் கோவில்களில் நாளை ஆருத்ரா உத்சவம்
/
காஞ்சிபுரம் கோவில்களில் நாளை ஆருத்ரா உத்சவம்
ADDED : ஜன 02, 2026 05:19 AM
காஞ்சிபுரம்: மார்கழி மாத திருவாதிரை திருநட்சத்திரத்தையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நாளை ஆருத்ரா தரிசன உத்சவம் நடக்கிறது.
காஞ்சிபுரம் கச்சபேஸ் வரர் கோவிலில் ஆருத்ராவை உத்சவத்தையொட்டி இன்று இரவு 9:00 மணி முதல், நாளை அதிகாலை 2:00 மணி வரை நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா சிறப்பு அபிஷேக அலங்காரம் நடக்கிறது.
நாளை காலை ஆருத்ரா சிறப்பு தரிசனத்தை தொடர்ந்து, பன்னீர் ரோஜா மாலை அலங்காரத்தில், சிவகாமி அம்மையாருடன், நடராஜ பெருமான் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளிலும் உலா வருகிறார்.
காஞ்சிபுரம் அடுத்த மேலச்சேரி லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவிலில் நாளை, காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், மஹாதீப ஆராதனையும், காலை 8:30 மணிக்கு நடராஜ பெருமான், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர் பெருமான் ஆகியோர் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வருகின்றனர்.
மாலை 6:00 மணிக்கு சுவாமிக்கு மஹா தீப ஆராதனையும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட உள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த கிளார் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், அய்யப்பன், சமயகுரவர்கள் நால்வர் உள்ளிட்ட அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடக்கிறது.
ஆண்டுதோறும் கிளார் அகத்தீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன உத்சவத்தில் சிவகாமி அம்பிகையுடன் நடராஜ பெருமான் கிளார் கிராமத்தில் வீதியுலா வருவார்.
இந்நிலையில், கோவிலில் இருந்து சுவாமி வீதியுலா வரும் விவசாய நிலத்தில் உள்ள பாதை ஆக்கிரமிப்பில் உள்ளதால் நடப்பு ஆண்டு வீதியுலா நடைபெறாது என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தவள் அம்மனுக்கு நாளை, காலை 9:-00 - 10.00 மணி வரையிம், மாலை 6.30 - இரவு 8.30 மணி வரை ஆருத்ரா உத்சவம் தரிசனம் நடைபெற உள்ளது என, கோவில் பரம்பரை தர்மகர்த்தா பழனி ராஜன் தெரிவித்து உள்ளார்.

