/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மஞ்சள்நீர் கால்வாய் சுவரில் துளையிட்டு வீட்டு கழிவுநீரை வெளியேற்றி அட்டகாசம்
/
மஞ்சள்நீர் கால்வாய் சுவரில் துளையிட்டு வீட்டு கழிவுநீரை வெளியேற்றி அட்டகாசம்
மஞ்சள்நீர் கால்வாய் சுவரில் துளையிட்டு வீட்டு கழிவுநீரை வெளியேற்றி அட்டகாசம்
மஞ்சள்நீர் கால்வாய் சுவரில் துளையிட்டு வீட்டு கழிவுநீரை வெளியேற்றி அட்டகாசம்
ADDED : ஆக 04, 2025 01:10 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில், புதிதாக கட்டப்பட்டு வரும் மஞ்சள்நீர் கால்வாயின் கான்கிரீட் சுவரில், சட்டவிரோதமாக துளையிட்டு, வீட்டு கழிவுநீரை பல்லவர்மேடு பகுதியில் வசிப்போர் வெளியேற்றி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், பழமையான மழைநீர் வடிகால்வாய் அமைப்பான மஞ்சள்நீர் கால்வாய், இன்றைக்கும் பயன்பாட்டில் உள்ளது. நகரில் பெய்யும் மழைநீர், சாலைகளில் தேங்காமல், மஞ்சள்நீர் கால்வாயில் கலப்பதால், பல இடங்களில் வெள்ளம் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
இந்த கால்வாயின் இருபுறமும் இருந்த கருங்கற்களால் ஆன மதில் சுவர்கள் சேதமடைந்தன. இந்த காரணத்தால், புதிதாக 40 கோடி ரூபாய் மதிப்பில், இருபுறமும் கான்கிரீட் சுவர் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. கான்கிரீட் சுவர் மட்டுமல்லாமல், கால்வாயில் கான்கிரீட் தரையும் அமைக்கப்பட உள்ளன.
இன்னும் ஒரு ஆண்டு நடைபெற உள்ள இத்திட்டம், முதற்கட்டமாக திருக்காலிமேடு, பல்லவர்மேடு போன்ற இடங்களில் நடக்கின்றன. இங்கு, கால்வாயின் இருபுறமும், கான்கிரீட் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன.
சுவர்கள் கட்டி ஆறு மாதங்களே ஆன நிலையில், பல்லவர்மேடு பகுதியில், புதிதாக கட்டப்பட்ட கான்கிரீட் சுவரில், சட்டவிரோதமாக துளை போட்டு, அப்பகுதியில் வசிப்போர் வீட்டு கழிவுநீரை வெளியேற்றி வருகின்றனர்.
சில மாதங்கள் முன்பாக, இரண்டு துவாரங்கள் மட்டுமே காணப்பட்ட நிலையில், சமீபத்தில் சுவரின் பல இடங்களில் துவாரங்கள் காணப்படுகின்றன.
திட்டம் துவங்கும்போதே, கழிவுநீர் திறந்துவிடுவதற்கான முறைகேடுகளும் நடப்பதால், திட்டத்தை கண்காணிக்கும் பொறியாளர்கள் கோட்டை விடுவதாக புகார் எழுந்துள்ளது.
மழைநீர் மட்டுமே கலக்க வேண்டிய மஞ்சள்நீர் கால்வாயில், கழிவுநீர் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.