sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கோவில், அரசு நிலங்களில் மரங்கள் வெட்டி கடத்தல் அட்டூழியம் மர்ம கும்பலை தடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறல்

/

கோவில், அரசு நிலங்களில் மரங்கள் வெட்டி கடத்தல் அட்டூழியம் மர்ம கும்பலை தடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறல்

கோவில், அரசு நிலங்களில் மரங்கள் வெட்டி கடத்தல் அட்டூழியம் மர்ம கும்பலை தடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறல்

கோவில், அரசு நிலங்களில் மரங்கள் வெட்டி கடத்தல் அட்டூழியம் மர்ம கும்பலை தடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறல்


ADDED : ஆக 18, 2025 11:30 PM

Google News

ADDED : ஆக 18, 2025 11:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர் :

உத்திரமேரரூர் வட்டாரத்தில் கோவில் நிலம், அரசு நிலம், வனத்துறை இடங்களில் உள்ள ஈச்ச மரங்கள் மற்றும் கருவேல மரங்கள், மர்ம நபர்களால், அடிக்கடி வெட்டி கடத்தப்பட்டு வருகின்றன. இவற்றை தடுக்க முடியாமல், பல துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டாரத்தின் 73 ஊராட்சிகளுக்கு உட்பட்ட ஏரி, குளம், குட்டை ஆகிய பகுதிகளில் ஈச்ச மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இந்த மரங்களின் கிளை, மட்டைகளை வைத்து, அப்பகுதி மக்கள் பாய், துடைப்பம் ஆகியவற்றை செய்கின்றனர். ஈச்ச மரக் கிளைகளில், துாக்கனாங்குருவிகள் கூடு கட்டியும் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், இங்குள்ள ஈச்ச மரங்களை, 'பொக்லைன்' இயந்திரம் மூலமாக வேரோடு தோண்டி எடுக்கப்படுகின்றன.

அவை, செங்கல்பட்டு, மதுராந்தகம், மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பன்னாட்டு தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கல்லுாரி கட்டடங்களுக்கு முன், அழகுக்காக நடப்படுகின்றன.

குறிப்பாக, உத்திரமேரூர் வட்டாரத்தில் உள்ள மல்லியங்கரணை, கட்டியாம்பந்தல், பெருங்கோழி ஆகிய இடங்களில் உள்ள ஏரி, குளம், தரிசு நிலங்கள் ஆகியவற்றில் இருந்து தினமும் ஈச்ச மரங்கள் தோண்டி எடுத்து, சரக்கு வாகனங்களில் கடத்தப்பட்டு வருகின்றன.

இதனால், அப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதோடு, கைவினை பொருட்களை செய்து வருமானம் ஈட்டும் மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

ஈச்ச மரங்களை அடியோடு தோண்டி கடத்தி செல்வோரை பிடிக்காமல், வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் அலட்சியம் காட்டுவதாக, கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அதேபோல, உத்திரமேரூர் தாலுகா, காட்டாங்குளம் கிராமத்தில் அகத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் வளர்ந்துள்ள கருவேல மரங்களையும், மர்ம நபர்கள் வெட்டி கடத்துகின்றனர்.

நேற்று, கருவேல மரங்களை வெட்டி, சரக்கு வாகனத்தில் கடத்துவோர் குறித்து, அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதிகாரிகள் வருவதை அறிந்த கடத்தல்காரர்கள், அங்கிருந்து உடனடியாக தப்பினர்.

கோவில் நிலம் மட்டுமின்றி, உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வனம், பொது இடங்களில் உள்ள கருவேல மரங்களும் அடிக்கடி வெட்டி, செங்கல் சூளை பயன்பாட்டிற்காக கடத்தப்பட்டு வருகின்றன.

உத்திரமேரூர் வட்டாரத்தில் ஈச்ச மரங்கள், கருவேல மரங்களை வெட்டி கடத்துவோர் மீது, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காட்டாங்குளம் கிராம மக்கள் கூறியதாவது:

அகத்தீஸ்வரர் கோவில் நிலத்தில் மர்ம நபர்கள் நேற்று, கருவேல மரங்களை வெட்டி எடுத்துச் சென்றனர். இதுகுறித்து புகார் அளித்துள்ளோம். உத்திரமேரூர் வட்டாரத்தில், அரசு மற்றும் தரிசு நிலங்களில் பல்வேறு மரங்களை வெட்டி கடத்தி செல்வது தொடர்ந்து நடந்து வருகிறது. மரங்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வருவாய் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், 'உத்திரமேரூர் தாலுகாவில் உள்ள அரசு மற்றும் தரிசு நிலங்களில் ஈச்ச மரங்கள் மற்றும் கருவேல மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக பொதுமக்களிடம் புகார் வருகின்றன. அதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.

நடவடிக்கை பாயும் உத்திரமேரூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில், மரங்கள் வெட்டி கடத்தும் சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மரம் வெட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். - ராமதாஸ் வனச்சரக அலுவலர், உத்திரமேரூர்


காட்டாங்குளம் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவில் நிலத்தில் கருவேல மரங்களை வெட்டி கடத்தியோர் மீது நடவடிக்கை எடுக்க, உத்திரமேரூர் போலீசில் புகார் அளிக்கப்பட உள்ளது. வரும் நாட்களில் மரங்களை வெட்டாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - ப்ரீத்திகா, அறநிலையத் துறை ஆய்வாளர், உத்திரமேரூர்







      Dinamalar
      Follow us