/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அய்யங்கார்குளம் மும்முனை சந்திப்பில் 10 நாளாகியும் அகற்றாத பேனரால் விபத்து அபாயம்
/
அய்யங்கார்குளம் மும்முனை சந்திப்பில் 10 நாளாகியும் அகற்றாத பேனரால் விபத்து அபாயம்
அய்யங்கார்குளம் மும்முனை சந்திப்பில் 10 நாளாகியும் அகற்றாத பேனரால் விபத்து அபாயம்
அய்யங்கார்குளம் மும்முனை சந்திப்பில் 10 நாளாகியும் அகற்றாத பேனரால் விபத்து அபாயம்
ADDED : டிச 12, 2025 05:54 AM

அய்யங்கார்குளம்:காஞ்சிபுரம் ஒன்றியம், அய்யங்கார்குளம் மும்முனை சந்திப்பு வளைவில், 10 நாட்களுக்கு முன் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனரால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், கவனத்தை திசை திருப்பும் வகையிலும் பிரதான சாலைகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில், பேனர் அமைக்க, உயர்நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, பிளக்ஸ் பேனர்கள், விளம்பர பதாகைகள் வைக்க, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி, பொதுமக்கள் மற்றும் வாகன நடமாட்டம் அதிகம் உள்ள கீழம்பி நான்கு முனை சந்திப்பில், பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
புதுமனை புகுவிழா, திருமணம், வரவேற்பு, பிறந்தநாள் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் போது இப்பகுதியில், போட்டா போட்டியில் பிளக்ஸ் பேனர் வைப்பது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில், காஞ்சிபுரம் அய்யங்கார்குளம் கூட்டு சாலை, மும்முனை சாலை சந்திப்பு வளைவு பகுதியில், திருமண விழாவிற்காக பயணியர் நிழற்குடையை மறைத்து பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
விழா முடிந்து 10 நாட்களுக்கு மேலாகியும் பேனர் அகற்றப்படாமல் உள்ளது.
சாலை வளைவில் உள்ள பேனர், வாகன ஓட்டிகளின் கவனம் சிதறுவதால் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. மேலும், நிழற்குடையை பயணியர் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.
எனவே, அய்யங்கார்குளம் கூட்டு சாலையில், வாகன ஓட்டிகளை திசை திருப்பி விபத்து ஏற்படும் வகையில், அரசு விதியை மீறி வைக்கப்பட்டுள்ள விதிமீறல் பிளக்ஸ் பேனரை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

