/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தெருவில் இறந்த நாய் குட்டிகளை தகனம் செய்யவே சேகரித்தோம்: 'புளுகிராஸ்' அமைப்பினர் விளக்கம்
/
தெருவில் இறந்த நாய் குட்டிகளை தகனம் செய்யவே சேகரித்தோம்: 'புளுகிராஸ்' அமைப்பினர் விளக்கம்
தெருவில் இறந்த நாய் குட்டிகளை தகனம் செய்யவே சேகரித்தோம்: 'புளுகிராஸ்' அமைப்பினர் விளக்கம்
தெருவில் இறந்த நாய் குட்டிகளை தகனம் செய்யவே சேகரித்தோம்: 'புளுகிராஸ்' அமைப்பினர் விளக்கம்
ADDED : மார் 04, 2024 06:19 AM

சென்னை : வேளச்சேரியில் உள்ள 'புளுகிராஸ்' அமைப்பில், தமிழக விலங்குகள் நல வாரியத்தினர் சோதனை நடத்தினர். அங்குள்ள விலங்குகளை முறையாக பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் அடிப்படையில், வாரியத்தினர் ஆய்வு செய்தனர்.
அப்போது, புளூகிராஸ் அமைப்பில் தினமும் 50க்கும் மேற்பட்ட விலங்குகள் இறந்துள்ளதாகவும், அதற்கான காரணம் கிடைக்கவில்லை எனவும்,அவர்கள் கூறினர்.
அதற்கு உரிய விளக்கம்அளிக்கும் வகையில், புளுகிராஸ் அமைப்பைச் சேர்ந்த நந்திதா கிருஷ்ணா கூறியதாவது:
விலங்குகள் பாதுகாப்பிற்காக, புளூகிராஸ் என்ற அமைப்பு, 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில், சொந்தமாக மூன்று இடங்களை வாங்கி, இதை நடத்தி வருகிறோம்.
இந்தியாவிலேயே விலங்குகளுக்கான தனி ஆம்புலன்ஸ் இயக்கியதும் எங்கள் அமைப்புதான்; குடும்ப கட்டுப்பாடு மையம் உருவாக்கப்பட்டதும் இங்குதான். அதன் வாயிலாக, தெரு நாய்கள் கட்டுப்பட்டன.
தமிழக விலங்குகள் நல வாரியத்தின் உத்தரவுபடி, புளுகிராசில் விலங்குகளை ஒப்படைக்கக்கூடாது என, பலரிடம் தெரிவித்துள்ளோம். எனினும் தினமும், 60 முதல் 70 நாய், பூனைக் குட்டிகளை புளுகிராசில் ஒப்படைக்க வருகின்றனர்.
அவற்றை நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. உடனே அவர்கள், தெருவில் விட்டு செல்கின்றனர். தாய் இல்லாமல் அந்த குட்டிகள் எப்படி உயிர் வாழும். அதனால், சில நாட்களில் இறந்து விடுகின்றன.
அவ்வாறு சாலையில் இறந்துபோன குட்டிகளை சேகரித்து எரிப்பதற்காக, புளூகிராஸ் அலுவலக வளாகத்தில், மூட்டைகளில் கட்டி வைத்திருந்தோம். எங்கள் அமைப்பில் தகனமேடையும் உள்ளது.
சோதனைக்கு வந்த மாநில விலங்குகள் நல வாரியத்தினர், எங்கள் ஊழியர்கள், மருத்துவர்கள் கூறிய காரணத்தை ஏற்காமல், அவற்றை சாக்கு மூட்டையில் இருந்து வெளியே எடுத்து, மொபைல் போனில் வீடியோவாக எடுத்தனர்.
அதிலிருந்த நாய், பூனைக் குட்டிகள், எங்கள் அமைப்பின் பாதுகாப்பில் இருந்து இறக்கவில்லை என்பதை கூறியும், வாரியத்தினர் ஏற்கவில்லை.
ஆவணங்களையும் முறையாக பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தவறானது. விலங்குகள் குறித்த ஆவணங்களை, கணினியில் முறையாக பதிவேற்றம் செய்துள்ளோம். அவற்றை, வாரியத்தினர் பார்வையிடவில்லை.
குட்டிகளுக்கு, 'ஷெர்லாக்' எனும் பவுடரை பாலில் கலந்து கொடுக்கிறோம். அதை பார்த்து, கெட்டுப்போன பால் என நினைக்கின்றனர்.
இதே வாரியத்தினர், ஒவ்வொரு மாதமும் பரிசோதனை செய்கின்றனர். அப்போதெல்லாம் நற்சான்று வழங்கியோர், இப்போது ஏன் இப்படி பேசுகின்றனர் என புரியவில்லை.
எங்கள் அமைப்பின் மீது, அவதுாறு பரப்பும் செயலாக இந்த சோதனை நடத்தப்பட்டு, பத்திரிக்கையில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

