/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின் பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல் வாரியம்...சுணக்கம்:416 பணியிடங்களை நிரப்பாததால் தொடரும் சிக்கல்
/
மின் பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல் வாரியம்...சுணக்கம்:416 பணியிடங்களை நிரப்பாததால் தொடரும் சிக்கல்
மின் பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல் வாரியம்...சுணக்கம்:416 பணியிடங்களை நிரப்பாததால் தொடரும் சிக்கல்
மின் பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல் வாரியம்...சுணக்கம்:416 பணியிடங்களை நிரப்பாததால் தொடரும் சிக்கல்
ADDED : ஜூன் 04, 2025 11:37 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில், 416 பல்வேறு விதமான பணியிடங்கள் காலியாக உள்ளதால், கிராமப்புறங்களில் மின் வினியோகம், சீரமைப்பு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில், காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, ஸ்ரீபெரும்புதுார் ஆகிய மின்வாரிய கோட்ட அலுவலகங்களின் கீழ், 41 துணைமின் நிலையங்கள் இயங்கி வருகின்றன.
இதில், கள உதவியாளர், கம்பியாளர், மின் பாதை ஆய்வாளர், ஆக்க முகவர், வணிக ஆய்வாளர், இளநிலை மற்றும் உதவி மின் வாரிய பொறியாளர் உள்ளிட்ட 1,240 பணியிடங்கள் உள்ளன.
இந்த பணியாளர்களின் வாயிலாக, மின் நுகர்வோர் மற்றும் தொழில் வழித்தடங்களில் ஏற்படும் மின்சாரம் தொடர்பான பிரச்னைகள், மின் வினியோகம், பழுது நீக்குவது, புதிய தடம் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
திணறல்
காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில், கம்பியாளர், இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட 416 பணியிடங்கள் காலியாக இருப்பதால், மின் வினியோகம் தொடர்பான புகார்களை சரி செய்ய முடியாமல், சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
காஞ்சிபுரம் வடக்கு கோட்டம் பரந்துார் துணைமின் நிலைய உதவி பொறியாளர் பணியிடம், கோவிந்தவாடி மின்வாரிய அலுவலகத்தில் உதவிப்பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.
இந்த மின்வாரிய அலுவலகம் சார்ந்த மின் நுகர்வோர் புகார் அளித்தாலும், மின்வாரிய அதிகாரிகள் சரியான பதில் அளிப்பதில்லை. மேலும், மின் வாரிய உயர் அதிகாரிகளை தொடர்புகொள்ள முடியவில்லை.
பாதிப்பு
குறிப்பாக, குறைந்த அழுத்த மின் வினியோகம், பியூஸ் போடுவது, மின் வழித்தடத்தை மாற்றி அமைப்பது உள்ளிட்ட மின்சார வினியோகம் தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில், கோடை மழை பெய்ததில், கொட்ரவாக்கம் கிராமத்தில் மின்கம்பங்கள் முறிந்து, மின்வழித்தடம் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்ய, கம்பியாளர்கள் பற்றாக்குறையால் சரி செய்ய முடியாத நிலை உள்ளது.
அதேபோல், காரை கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு செல்லும் மின்வழித்தடம் பாதிப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தில் புகார் அளித்தும் சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
தவிர, வாலாஜாபாத் சுற்றியுள்ள கிராமங்களில் மின் தொடர்பான புகார்களுக்கு சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் செவி சாய்ப்பதில்லை என, மின் நுகார்வோர் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், கிராமப்புறங்களில் மின் வினியோகம் வெகுவாக பாதிக்கப்படுவதோடு, சம்பந்தப்பட்ட குறைபாடுகளை தீர்க்க ஆளில்லை என, மின் வாரிய ஊழியர்கள் புலம்பி வருகின்றனர்.
பரிந்துரை
மேலும், ஐந்து பேரின் பணியை ஒருவர் செய்யும்போது, பணிச்சுமை கூடுதலாக உள்ளது என, புலம்பலை ஏற்படுத்தி உள்ளது.
இதை சரி செய்வதற்கு கம்பியாளர், ஆக்கமுகவர்கள், இளநிலை மற்றும் உதவிப்பொறியாளர்கள் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கு சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில், 416 காலி பணியிடங்கள் உள்ளன. இது, ஆண்டுதோறும் பணி ஓய்வு, பதவி உயர்வு, இடமாறுதல் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படுகிறது.
காலி பணியிடங்களின் விபரங்களை அரசிற்கு பரிந்துரை செய்துள்ளோம். அதை நிரப்புவதற்கு அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இருக்கும் ஊழியர்களை வைத்து, பணிளை தொய்வு இல்லாமல் நாங்கள் செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

