/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரூ.50,000க்கு மின் இணைப்பு வழங்கும் வாரிய அதிகாரிகள் வசூல் வேட்டை வருவாய் துறையும் ரூ. ஒரு லட்சம் வசூலிப்பதால் அதிர்ச்சி
/
ரூ.50,000க்கு மின் இணைப்பு வழங்கும் வாரிய அதிகாரிகள் வசூல் வேட்டை வருவாய் துறையும் ரூ. ஒரு லட்சம் வசூலிப்பதால் அதிர்ச்சி
ரூ.50,000க்கு மின் இணைப்பு வழங்கும் வாரிய அதிகாரிகள் வசூல் வேட்டை வருவாய் துறையும் ரூ. ஒரு லட்சம் வசூலிப்பதால் அதிர்ச்சி
ரூ.50,000க்கு மின் இணைப்பு வழங்கும் வாரிய அதிகாரிகள் வசூல் வேட்டை வருவாய் துறையும் ரூ. ஒரு லட்சம் வசூலிப்பதால் அதிர்ச்சி
ADDED : ஆக 29, 2025 12:45 AM

செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசு புறம்போக்கு இடங்களில் வீடு, வணிக ரீதியாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு வருவாய்த்துறை, மின்வாரிய அதிகாரிகள் கூட்டு சேர்ந்து, 'வசூல் வேட்டை' நடத்தி, மின் இணைப்பு வழங்கி உள்ளனர். பாதுகாக்க வேண்டியே அதிகாரிகளே கூறுபோட்டு விற்பதால், அரசு இடங்கள் காணாமல் போகும் அபாயம் நிலவுகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன.
இந்த தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளில், அரசு அனுமதி வழங்கிய நத்தம் புறம்போக்கு உள்ளிட்ட இடங்களுக்கு மட்டும் வீடு கட்டி குடியிருப்போருக்கு மின் இணைப்பு வழங்க, தாசில்தார் தடையில்லாச் சான்றிதழ் வழங்கலாம்.
அரசு மேய்க்கால் புறம்போக்கு, நீர்நிலை புறம்போக்கு இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி உள்ளவர்களுக்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்க, தாசில்தார்களுக்கு அதிகாரம் இல்லை என, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால் இதை மீறி, அரசு மேய்க்கால் புறம்போக்கு, நீர்நிலைகளில் வீடு கட்டியுள்ளவர்கள் மின் இணைப்பு பெற, தாசில்தார்கள் சிலர் தடையில்லாச் சான்ழிதழ் வழங்கியுள்ளனர்.
அதன்படி, ஒரு சான்றிதழுக்கு 50,000 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இச்சான்றிதழ்களுக்கு பணம் வசூலித்து தர, தாலுகா அலுவலகங்களில் 'புரோக்கர்'களையும் நியமித்துள்ளனர்.
புறம்போக்கு இடங்களில் வீடு கட்டி வசிப்போர், தடையில்லாச் சான்றிதழ் கிடைத்ததும், மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, அச்சிறுபாக்கம், மதுராந்தகம், மறைமலை நகர் ஆகிய மின்வாரிய கோட்டங்கள் உள்ளன.
தடை செய்யப்பட்ட அரசு புறம்போக்கு இடங்களில் வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு, வணிக ரீதியாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு, மின் இணைப்பு வழங்க கூடாது.
ஆனால், செங்கல்பட்டு மாவட்டத்தில், 30,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு, ஆக்கிரமிப்பாளர்களுக்கு மின்வாரியத்தினர் இணைப்பு வழங்கி வருகின்றனர்.
இதன்படி, செட்டிப்புண்ணியம் மின் பிரிவு அலுவலகம் கட்டுப்பாட்டில் உள்ள செட்டிப்புண்ணியம், வீராபுரம், புலிப்பாக்கம், பரனுார், எம்.ஜி.ஆர்., நகர், மகேந்திரா வேல்ர்டு சிட்டி ஆகிய பகுதிகளில், அரசு புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி வசிப்போருக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.
அதாவது, பொய்யான சான்றிதழ்களை கணினியில் பதிவு செய்து, வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு, வணிக ரீதியான கட்டடங்கள் என, 100 மின் இணைப்புகளுக்கும் மேல் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த இடங்களில், குறைந்த மின்னழுத்த பிரச்னையால் பகுதிவாசிகள் தவித்து வருகின்றனர். ஆனால், புதிதாக மின்மாற்றி அமைக்காமல், ஆக்கிரமிப்பாளர்களுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.
இதில் பரனுார், வீராபுரம் கிராமங்களில், வீடுகள் கட்டி முடிக்காமல் உள்ளதற்கும், வீடே இல்லாத பகுதிகளிலும், பணம் வசூலித்துக் கொண்டு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிங்கபெருமாள்கோவில் மின்வாரிய அலுவலகத்தில், உதவி பொறியாளராக பணிபுரிந்த ஒரு அதிகாரி, அரசு புறம்போக்கு இடங்களில் வீடு கட்டி வசிப்போரிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு மின் இணைப்பு வழங்கியதாக, சில மாதங்களுக்கு முன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
தற்போது, வீராபுரம் மின் பிரிவு அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் இவர், செட்டிப்புண்ணியம் அலுவலகத்தில் பணிபுரியும் போது, இதே போல முறைகேடாக வசூல் வேட்டை நடத்தி, ஆக்கிரமிப்பாளர்களுக்கு மின் இணைப்பு வழங்கியதாக குற்றச்சாட்டு உள்ளது.
இதேபோல, செங்கல்பட்டு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட அரசு புறம்போக்கு இடங்களில் வீடு மற்றும் வணிக ரீதியாக கட்டடங்கள் கட்டியுள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு, வசூல் வேட்டை நடத்தி மின் இணைப்பு வழங்கும் பணியில், மின்வாரிய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
வருவாய்த் துறை அதிகாரிகளும், தடையில்லாச் சான்று வழங்கி வருகின்றனர். எனவே, அரசு புறம்போக்கு இடங்களை பாதுகாக்கவும், இவ்விரு துறைகளில் கூட்டு வசூல் வேட்டையை தடுக்கவும், செங்கல்பட்டு கலெக்டர் சினேகா நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
- நமது நிருபர் -