/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெல்லிக்காய் பறித்த சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து பலி
/
நெல்லிக்காய் பறித்த சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து பலி
நெல்லிக்காய் பறித்த சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து பலி
நெல்லிக்காய் பறித்த சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து பலி
ADDED : மார் 18, 2024 03:31 AM

கூடுவாஞ்சேரி: நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, எட்டாவது வார்டுக்கு உட்பட்ட கணபதி நகர் பகுதியில் வசிப்பவர் நிஷாந்த், 30. இவர், மறைமலை நகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி பூங்கொடி, 30. இவர்களுக்கு அஸ்வின், 3, நிஷாந்த், 7, என இரண்டு குழந்தைகள் உள்ளனர். நிஷாந்த், அரசு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில். நேற்று பள்ளி விடுமுறை என்பதால், வீட்டின் அருகில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த நிஷாந்த், அருகில் உள்ள பூங்காவில் உள்ள 15 அடி ஆழமுள்ள உறை கிணற்றின் மேல் உள்ள மூடியில் நின்று, அருகில் இருந்த மரத்தில், சிறிய குச்சிகளை பயன்படுத்தி நெல்லிக்காய் பறித்தான்.
அப்போது, திடீரென கிணற்றின் மேல் போடப்பட்டிருந்த சிலாப் உடைந்து, சிறுவன் கிணற்றில் தவறி விழுந்தான்.
நீண்ட நேரம் ஆகியும் மகன் வராததை கண்டு, அவனது பெற்றோர் தேடினர். அப்போது, அவனது சைக்கிள் கிணற்றின் அருகில் இருந்ததை கண்டு, கிணற்றுக்குள் பார்த்தனர்.
கிணற்று நீரில் சிறுவனின் காலணி மிதந்தது கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கிணற்றில் இறங்கி தேடினர்.
கிணற்று நீரில் மூழ்கி, பேச்சு மூச்சின்றி இருந்த சிறுவனை மீட்டு, கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவர்கள் பரிசோதனையில், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்து சென்ற கூடுவாஞ்சேரி போலீசார், சிறுவன் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

