ADDED : ஜன 28, 2025 12:12 AM
ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில், 20 ஆண்டுகளாக துாய்மை பணியாளராக பணிபுரியும் பெண் ஒருவர், கடந்த 22ம் தேதி திருமங்கையாழ்வார் சுடுகாடு அருகே, துாய்மை பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பேரூராட்சி குப்பை வாகனத்தின் டிரைவரும், பொறுப்பு மேற்பார்வையாளருமான சேக்கிழார், அங்குள்ள மனித கழிவை அள்ள சொல்லி அவதுாறாக பேசியதாகவும், சேக்கிழார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஸ்ரீபெரும்புதுார் உதவி கண்காணிப்பாளர் உதயகுமாரிடம் அப்பெண் புகார் அளித்தார்.
இதையடுத்து, ஸ்ரீபெரும்புதுார் செயல் அலுவலர் முன்னிலையில் துாய்மை பணியாளர் விளக்கம் அளித்ததின்படி, கடந்த 25ம் தேதி சேக்கிழார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் போலீசார் சேக்கிழார் மீது, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

