/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நாளை தேரோட்டம்
/
பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நாளை தேரோட்டம்
ADDED : பிப் 06, 2025 10:04 PM
பெருநகர்:உத்திரமேரூர் ஒன்றியம், பெருநகர் பட்டுவதனாம்பிகை உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தைப்பூச பெருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், இரவு சிம்ம வாகன உற்சவமும் நடந்தது.
இரண்டாம் நாள் உற்சவமான பிப்., 3ம் தேதி காலை சந்திரசேகரர் புறப்பாடும், இரவு சூரிய பிரபை உற்சவமும் நடந்தது. மூன்றாம் நாள் உற்சவமான பிப்., 4ம் தேதி இரவு, முருகர் மயில் வாகனத்திலும், விநாயகர் பெருச்சாளி வாகனத்திலும் எழுந்தருளினர்.
நான்காம் நாள் உற்சவமான நேற்று முன்தினம் காலை சந்திரசேகரர் புறப்பாடும், இரவு நாக வாகன உற்சவமும் நடந்தது. ஐந்தாம் நாள் உற்சவமான நேற்று காலை பட்டுவதனாம்பிகை பூமால் செட்டிகுளம் சென்றார். இரவு, அம்பாள் குளக்கரையில் இருந்து கோவிலுக்கு வந்தார். அதிகாலை பட்டுவதனாம்பிகைக்கும், பிரம்மபுரீஸ்வரருக்கும் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடந்தது. தொடர்ந்து சுவாமியும், அம்பிகையும் திருமண கோலத்தில், ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தனர்.
பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் உற்சவமான நாளை காலை தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் அறங்காவலர் குழுவினர், பரம்பரை அர்ச்சகர்கள், பெருநகர் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.