/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அங்கன்வாடி மையத்திற்கு ஆசிரியர் வராததால் வீடு திரும்பிய குழந்தைகள்
/
அங்கன்வாடி மையத்திற்கு ஆசிரியர் வராததால் வீடு திரும்பிய குழந்தைகள்
அங்கன்வாடி மையத்திற்கு ஆசிரியர் வராததால் வீடு திரும்பிய குழந்தைகள்
அங்கன்வாடி மையத்திற்கு ஆசிரியர் வராததால் வீடு திரும்பிய குழந்தைகள்
ADDED : ஆக 07, 2025 01:52 AM

உத்திரமேரூர்:-மேல்பாக்கம் அங்கன்வாடி மையத்தில் ஆசிரியர் வராததால், குழந்தைகள் வீட்டிற்கு திரும்பி சென்றனர்.
உத்திரமேரூர் ஒன்றியம் , மேல்பாக்கம் கிராமத்தில், அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இங்கு, 30 குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இந்த அங்கன்வாடி மையத்தில், 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்தை உறுதி செய்வது, முன் பருவ கல்வி கற்பிப்பது, கர்ப்பிணியரின் நலனை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.
இந்த அங்கன்வாடி மையத் தில் சமையலர் பணியிடம் நீண்ட நாட்களாக காலியாக உள்ளது. இதனால், சமைக்கும் பணியை ஆசிரியரே கவனித்து வந்தார்.
இந்நிலையில், ஆசிரியர் வராததால், அங்கன்வாடி மையம் வேறொரு நபரை வைத்து நேற்று காலை 9:00 மணிக்கு திறக்கப்பட்டது. ஆனால், காலை 11:00 மணி வரை, அங்கன்வாடி மைய ஆசிரியர் பணிக்கு வரவில்லை.
இதனால், மையத்திற்கு வந்த குழந்தைகள், மீண்டும் வீட்டிற்கு திரும்பிச் சென்றனர். பின்னர், அங்கன்வாடி மையத்திற்கு காலதாமதமாக வந்த ஆசிரியர், குழந்தைகள் யாரும் இல்லாததால் திரும்பி சென்றுவிட்டார்.
குழந்தைகளின் பெற்றோர் கூறியதாவது:
மேல்பாக்கம் அங்கன்வாடி மையத்தில் ஆறு மாதமாக சமையலர் இல்லாததால், குழந்தைகளுக்கு குறித்த நேரத்தில் சத்துணவு வழங்கப்படுவதில்லை.
இது குறித்து துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. தொடர்ந்து, நேற்றும் ஆசிரியர் குறித்த நேரத்திற்கு பணிக்கு வராததால், குழந்தைகள் வீட்டிற்கு திரும்பினர். அங்கன்வாடி மையம், வேறொரு நபரால் திறந்து வைத்துவிட்டு, யாரும் இல்லாத நிலை இங்கு தொடர்ந்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து உத்திரமேரூர் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அகிலா கூறியதாவது:
மேல்பாக்கம் அங்கன்வாடி மையத்தில் பணியாற்றும் ஆசிரியர் இரண்டு நாட்கள் பயிற்சிக்காக உத்திரமேரூர் சென்றுள்ளார்.
இவருக்கு பதிலாக அனுமந்தண்டலம் ஆசிரியர், மேல்பாக்கத்தில் பணியாற்ற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அவர் நேற்று குறித்த நேரத்திற்கு வராமல், காலதாமதமாக வந்தது குறித்து விசாரிக்கப் பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.