/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணி முடிய...7 மாதம்!:ஆகஸ்டில் பயன்பாட்டிற்கு திறக்க திட்டம்
/
கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணி முடிய...7 மாதம்!:ஆகஸ்டில் பயன்பாட்டிற்கு திறக்க திட்டம்
கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணி முடிய...7 மாதம்!:ஆகஸ்டில் பயன்பாட்டிற்கு திறக்க திட்டம்
கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணி முடிய...7 மாதம்!:ஆகஸ்டில் பயன்பாட்டிற்கு திறக்க திட்டம்
ADDED : ஜன 03, 2024 12:33 AM
சென்னை:'வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில், 20 கோடி ரூபாயில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணிகள், வரும் ஆகஸ்டில் முடியும்' என, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக, வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில், 88 ஏக்கர் பரப்பளவில், 393.71 கோடி ரூபாயில் புதிய பேருந்து நிலையம் கட்டி திறக்கப்பட்டு உள்ளது.
முதற்கட்டமாக, சென்னையில் இருந்து விரைவு போக்குவரத்து கழகத்தின் விரைவு, சொகுசு பேருந்துகள், கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.
தற்போது, சென்னையின் பல்வேறு பகுதிகளையும் இணைக்கும் வகையில் கூடுதல் மாநகர பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோல், தமிழக அரசின் பங்களிப்போடு, கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணிகளும் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன.
இதற்கிடையே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 500 மீட்டர் துாரத்தில், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளன.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துடன், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில், 'எஸ்கலேட்டர்' வசதியுடன் கூடிய நடைமேம்பாலத்தையும் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
வண்டலுார் - கூடுவாஞ்சேரி புறநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே, கிளாம்பாக்கத்தில், 20 கோடி ரூபாயில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 500 மீட்டர் துாரத்தில், இந்த புதிய ரயில் நிலையம் அமைகிறது.
மூன்று நடைமேடைகளில், 12 பெட்டிகள் உடைய ரயில் நிற்கும் வகையில், இருவழிகளிலும் ரயில் பாதை அமைக்கப்படுகிறது.
ரயில் நிலைய மேலாளர் அறை, டிக்கெட் அலுவலகம், ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகம், குடிநீர் வசதி, இருக்கைகள் ஏற்படுத்தப்படுகின்றன. 500 வாகனங்கள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் அமைக்கப்படுகிறது.
அதேபோல் பயணியர் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக, 'சிசிடிவி கேமரா'க்கள், நடைமேம்பாலம், எஸ்கலேட்டர்கள் உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன.
அனைத்து பணிகளையும் முடித்து, வரும் ஆகஸ்ட் மாதத்தில் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்.
அதன் பின், சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில் தற்போது உள்ளதை விட, 30 சதவீத மின்சார ரயில்களின் சேவை அதிகரிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கட்டணம் குறைப்பு
கிளாம்பாக்கத்துக்கு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் மாற்றப்பட்டுள்ளதால், கட்டணம் 30 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.
தற்போது, விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பெங்களூரு, கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் பேருந்துகளை தவிர, மற்ற அனைத்து வழித்தட பேருந்துகளும், சென்னை, கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
இனி, இந்த பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு செல்லும்.
அதே போல, தென்மாவட்டங்கள் மற்றும் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரும் விரைவு சொகுசு, 'ஏசி' பேருந்துகள், சென்னை, கோயம்பேடு செல்வது நிறுத்தப்பட்டு, கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால், 29 கி.மீ., துாரம் பயணம் குறைகின்றன.
அதன் அடிப்படையில், கி.மீ., துாரத்திற்கு ஏற்றார்போல், 30 ரூபாயில் இருந்து 80 ரூபாய் வரை பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இணைப்பு வாகன வசதி
பயணியர் கூறியதாவது:
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் உட்பகுதியில் இருந்து, மாநகர பேருந்து இயக்கும் பகுதிக்கு வரவே, நீண்ட துாரம் நடக்க வேண்டியுள்ளது. 600 மீட்டர் துாரம் நடக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது, பயணியருக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.
இதில் சில மாற்றம் செய்து எளிமைப்படுத்தினால், பயனுள்ளதாக இருக்கும். இங்கிருந்து சென்னை மாநகரின் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், மாநகர பேருந்துகளை இயக்க வேண்டும்.
உடனடி தேவையாக, அருகில் உள்ள வண்டலுார், ஊரப்பாக்கம் உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்குச் செல்ல சிற்றுந்துகள், ஷேர் ஆட்டோக்களை இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.