/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற நீர்வளத்துறைக்கு கலெக்டர் உத்தரவு
/
ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற நீர்வளத்துறைக்கு கலெக்டர் உத்தரவு
ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற நீர்வளத்துறைக்கு கலெக்டர் உத்தரவு
ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற நீர்வளத்துறைக்கு கலெக்டர் உத்தரவு
ADDED : ஏப் 27, 2025 01:52 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 380 ஏரிகளும், ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் 381 ஏரிகள் என, 761 ஏரிகள் உள்ளன. இதனாலேயே, இம்மாவட்டத்தை ஏரிகள் மாவட்டம் என்பர்.
ஏரி பாசனத்தை நம்பி, ஆயிரக்கணக்கான ஏக்கள் விளை நிலங்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளன. ஆனால், நீர்வரத்து கால்வாய், ஏரிக்கரை, ஏரியின் உள் பகுதி என, அனைத்து இடங்களிலும் ஆக்கிரமிப்பாளர்கள் கட்டடம் கட்டுவதும், விவசாயம் செய்வதும், தொழில் நிறுவனங்கள் நடத்துவது பல இடங்களில் தொடர்கிறது.
இதனால், ஏரிகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக, வாராந்தோறும் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டத்தில், ஏராளமான புகார்கள் வந்தபடியே உள்ளன. இந்நிலையில், முசரவாக்கம் கிராமத்தில் உள்ள 150 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியில், 100 ஏக்கர் ஆக்கிரமிப்பில் இருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து, ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடக்கிறது.
இதற்கிடையே, ஏரி ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என, நீர்வளத் துறைக்கு காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார். ஆய்வு கூட்டங்கள் நடைபெறும்போது, ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுங்கள் என, கலெக்டர் கலைச்செல்வி அறிவுறுத்தி வருகிறார்.
இதைத் தொடர்ந்து, முசரவாக்கம் கிராமத்தில் உள்ள ஆக்கிரமிப்பு இடங்களில் செயல்படும் செங்கல் சூளைகளை அகற்ற இருப்பதாக நீர்வளத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டுள்ளார் எனவும், ஆக்கிரமிப்புகள் அகற்றிய விபரங்களை கலெக்டருக்கு அறிக்கையாக தாக்கல் செய்வோம் என, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல, ஏரியின் கரை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் முன், சர்வே செய்து, ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து அகற்றப்பட உள்ளன. இதற்காக, சர்வே துறையின் ஒத்துழைப்பையும், நீர்வளத்துறை எதிர்பார்த்துள்ளது.