/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோவில்களில் நவராத்திரி விழா விமரிசை
/
கோவில்களில் நவராத்திரி விழா விமரிசை
ADDED : அக் 05, 2024 10:56 PM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில், சந்தவெளி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாளான நேற்று, லட்சுமி நரசிம்மர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
பெரிய காஞ்சிபுரம் செங்குந்தர் பூவசரந்தோப்பு அன்னை ரேணுகாம்பாள், கம்பாநதி காமாட்சியம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். சின்ன காஞ்சிபுரம், அல்லாபாத் ஏரிக்கரை, வரதராஜபுரம் வரசித்தி விநாயகர், ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், பத்மாவதி தாயார், திருப்பதி வெங்கடேசப் பெருமாள் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா நெசவாளர் குடியிருப்பு ராஜகணபதி, பவானி அம்மன், பாலமுருகன் கோவிலில் பவானியம்மன் அய்யப்பன் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் பல்லவர்மேடு தீப்பாஞ்சியம்மன், பெருந்தேவி தாயார் அலங்காரத்தில் அருள்பாலித்தார். கண்ணந்தாங்கல் 108 சக்திபீட கோவிலில், சாகம்பரி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
உத்திரமேரூர்
உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கத்தில் உள்ள சொர்ணபுரீஸ்வரர் கோவிலில், நவராத்திரி விழா, கடந்த 2ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் இரவு நடந்த 3ம் நாள் நிகழ்ச்சியில், பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் சார்பில், சைதன்ய தேவியர் திருக்காட்சி மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அப்பகுதி பக்தர்கள் திரளாக கோவில் வளாகம் முன் அமர்ந்து சிவனை வழிபட்டு, பக்தி பாடல்கள் மற்றும் பஜனைகளை கேட்டனர். அப்போது ஆதிலட்சுமி, தனலட்சுமி, தன்யலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, வீரலட்சுமி, வித்யாலட்சுமி, விஜயலட்சுமி என, 8 அஷ்டலட்சுமிகள் மற்றும் பார்வதியுடன் முருகப்பெருமான் அருள்பாலித்தார்.
பகுதி ஊராட்சி தலைவர் சத்யா மற்றும் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அப்பாதுரை உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
மாங்காடு
குன்றத்துார் அருகே, மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில், நவராத்திரி பெருவிழா 2ம் தேதி துவங்கியது. நவராத்திரி விழாவில், ஒவ்வொரு நாளும் ஒரு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்து வருகிறார்.
விழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் ஒன்பது படிக்கட்டுகளில் கண்கவர் கொலு வைக்கப்பட்டுள்ளது.
இதில், அம்மன், முருகர், விநாயகர், பெருமாள் உள்ளிட்ட கடவுள்களின் அழகிய சிற்பங்கள், இடம் பெற்றுள்ளன. கோவிக்கு வரும் பக்தர்கள், வழிபாடுகளுக்கிடையே இந்த கொலுவை ரசித்து செல்கின்றனர்.