காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகேயுள்ள ஒலிமுகமதுபேட்டை பகுதியில், ரேஷன் அரிசி கடத்துவது அடிக்கடி நடப்பதால், உணவு வழங்கல் துறையினர் அங்கு அவ்வப்போது சோதனை செய்வது வழக்கம்.
வீடுகளில், 3 - 4 ரூபாய்க்கு வாங்கிய ரேஷன் அரிசியை, கிலோ கணக்கில் மூட்டை கட்டி, சரக்கு வாகனம், ரயில் வாயிலாக ஆந்திர மாநிலத்துக்கு கடத்தப்படுகிறது. அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் இப்பகுதியில் நடக்கிறது.
இதுதொடர்பாக, பலர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பல வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், மாவட்ட உணவு வழங்கல் அலுவலர் பாலாஜி தலைமையில், தனி வட்டாட்சியர் இந்துமதி உள்ளிட்டோர் ஒலிமுகமதுபேட்டையில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.
அப்போது, ரேஷன் அரிசியுடன் புறப்பட தயாராக இருந்த வாகனத்தை பறிமுதல் செய்தனர். அதில், 7,000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டறியப்பட்டது.
வாகன ஓட்டுனர், அரிசி கடத்திய நபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். மர்ம நபர்களை பிடிக்க, உணவு வழங்கல் அதிகாரிகள் போலீசிடம் புகார் அளித்துள்ளனர்.

