/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரூ.392 கோடி மதிப்பிலான பாதாள சாக்கடை திட்டத்தில்...குழப்பம்! : வெறும் 8 இன்ச் குழாயில் கழிவுநீர் சிக்கலின்றி செல்லுமா?
/
ரூ.392 கோடி மதிப்பிலான பாதாள சாக்கடை திட்டத்தில்...குழப்பம்! : வெறும் 8 இன்ச் குழாயில் கழிவுநீர் சிக்கலின்றி செல்லுமா?
ரூ.392 கோடி மதிப்பிலான பாதாள சாக்கடை திட்டத்தில்...குழப்பம்! : வெறும் 8 இன்ச் குழாயில் கழிவுநீர் சிக்கலின்றி செல்லுமா?
ரூ.392 கோடி மதிப்பிலான பாதாள சாக்கடை திட்டத்தில்...குழப்பம்! : வெறும் 8 இன்ச் குழாயில் கழிவுநீர் சிக்கலின்றி செல்லுமா?
ADDED : ஜன 30, 2025 08:21 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், பாதாள சாக்கடை திட்டம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை, 392 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் நிலையில், புதை வடிகால் குழாய் வெறும் 8 இன்ச் விட்டம் கொண்டதாக சிறிய அளவில் இருப்பதால், கழிவுநீர் செல்வதில் சிக்கல் ஏற்படுமோ என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. அடுத்த 50 ஆண்டுகளுக்கு, மக்கள்தொகை பெருக்கத்திற்கு இந்த குழாய் தாங்குமா எனவும், நகரவாசிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
காஞ்சிபுரம் நகராட்சியாக இருந்தபோது, 1975ல், அப்போது இருந்த 40 வார்டுகளுக்கு மட்டும் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதையடுத்து, 2013ல் நத்தப்பேட்டை, ஓரிக்கை, செவிலிமேடு, தேனம்பாக்கம் ஆகிய பகுதிகள், நகராட்சியுடன் இணைக்கப்பட்டன.
இந்த இடங்களில், நிதியில்லாத காரணத்தால் பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவர முடியவில்லை. 2021ல் காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, புதிதாக இணைந்த பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு நிதி கேட்டு, நகராட்சி நிர்வாகத் துறைக்கு, காஞ்சிபுரம் மாநகராட்சி 290 கோடி ரூபாய் கேட்டு கருத்துரு அனுப்பியது.
இதையடுத்து, பாதாள சாக்கடை திட்டம் மற்றும் நத்தப்பேட்டையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றுக்கு சேர்த்து, உலக வங்கி நிதியுதவியுடன், 392 கோடி ரூபாயில் மதிப்பிலான பாதாள சாக்கடை திட்டம், தனியார் நிறுவனம் வாயிலாக காஞ்சிபுரத்தில் துவங்கியுள்ளது.
செவிலிமேடு பகுதியில் துவங்கியுள்ள குழாய் பதிக்கும் பணிகள், அதை சுற்றியுள்ள இடங்களில் பணிகள் வேகமெடுத்துள்ளன.
செவிலிமேடு, ஓரிக்கை, நத்தப்பேட்டை, திருக்காலிமேடு, தேனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில், 11 வார்டுகளில் இத்திட்டத்தின் கீழ், 180 கி.மீ., துாரத்திற்கு குழாய் பதிக்கப்பட உள்ளன. மொத்தம், 7,437 கழிவுநீர் சேகரமாகும் தொட்டிகள் அமைத்து, 15,652 வீடுகளுக்கு புதிதாக பாதாள சாக்கடை புதை வடிகால் குழாய் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஒரு சில வார்டுகளில் பணிகள் முடிந்து, மற்ற இடங்களில் பணிகள் நடக்கின்றன. இதற்கான செயல்திட்டத்தை பார்த்து, காஞ்சிபுரம் நகரவாசிகள் முக்கியமான கேள்வியை தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.
அதாவது, பாதாள சாக்கடை திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் குழாய், வெறும் 8 இன்ச் விட்டம் கொண்டதாக அமைந்துள்ளது. இந்த சிறிய அளவிலான விட்டம் கொண்ட குழாயில், எப்படி கழிவுநீர் விரைவாகவும், தாராளமாகவும், அடைப்பு இன்றி செல்லும் என, நகரவாசிகள் கேள்வி எழுப்புகின்றனர். எதிர்காலத்தில் குழாயில் நிச்சயம் அடைப்பு ஏற்படும் என, அச்சம் தெரிவிக்கின்றனர்.
கடந்த 1975ல் அமைக்கப்பட்ட பெரிய அளவிலான புதைவடிகால் குழாய்களிலேயே பல்வேறு இடங்களில் அடைப்புகள் ஏற்பட்டு, அவற்றை சீர்படுத்த முடியாமல், தற்போது வரை லாரி வாயிலாக சரிசெய்ய மாநகராட்சி பொறியியல் பிரிவு திணறி வருகிறது.
தினமும் மாநகராட்சியின் ஏதாவது ஒரு இடத்திலாவது, பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், புதிதாக அமைக்கப்படும் குழாயின் அளவு மிக சிறியதாக உள்ளதாக, நகரவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
வெறும் 8 இன்ச் விட்டம் கொண்ட இந்த வளையும் தன்மை கொண்ட குழாய்கள், அடுத்த 50 ஆண்டுகளுக்கு, தாக்குபிடிக்குமா எனவும், அப்போதைய மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப அடைப்பு இன்றி கழிவுநீர் வெளியேறுமா எனவும், பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
பெரிய அளவிலான குழாய்களே பல இடங்களில் சேதமாகியும், மணல் சேகரமாகி அடைப்பு ஏற்படும் நிலையில், இந்த சிறிய விட்டம் கொண்ட குழாய்கள் மணல் உள்ளிட்ட பல்வேறு கசடுகளை எப்படி தாங்கும் என்கின்றனர்.
ஆனால், அனைத்து வகையான கழிவுநீரையும், இந்த குழாய்கள் தாக்குப்பிடிக்கும் என, காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் பதில் அளிக்கப்படுகிறது.
கழிவுநீர் குழாய்கள் அனைத்து வகையிலும் ஆராய்ந்து தான் அமைக்கப்படுகிறது. இங்கு மட்டுமல்லாமல், அனைத்து இடங்களிலும் இந்த குழாய்கள் தான், பாதாள சாக்கடை திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. விழிப்புணர்வு இல்லாமல், கழிவுநீர் குழாயில் நாப்கின், கற்கள் போன்றவை போடுவதால் அடைப்பு ஏற்படுகிறது. முறையாக வடிகட்டி, கழிவுநீரை மட்டும் இந்த குழாயில் அனுப்பினால், எந்தவித அடைப்பும் இன்றி கழிவுநீர் செல்லும். இதுவரை, 6 கி.மீ., துாரம் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் பணிகள் முடிக்கப்படும்.
கணேசன்,
மாநகராட்சி பொறியாளர்,
காஞ்சிபுரம்.