/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட...இழுபறி!: 3 ஏக்கரில் இடம் வழங்கியும் நடவடிக்கை இல்லை
/
ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட...இழுபறி!: 3 ஏக்கரில் இடம் வழங்கியும் நடவடிக்கை இல்லை
ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட...இழுபறி!: 3 ஏக்கரில் இடம் வழங்கியும் நடவடிக்கை இல்லை
ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட...இழுபறி!: 3 ஏக்கரில் இடம் வழங்கியும் நடவடிக்கை இல்லை
ADDED : பிப் 05, 2025 08:25 PM

வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் கட்டுவதற்கும், வாகன சோதனை நடத்துவதற்கும், நான்கு ஆண்டுகளுக்கு முன், 3 ஏக்கரில் இடம் ஒதுக்கி வழங்கிய நிலையில், கட்டடம் கட்ட 6.6 கோடி ரூபாயை அரசு இன்னும் ஒதுக்காததால், இடநெருக்கடியில் வாகன சோதனை நடத்தப்படுகிறது.
ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் பட்டுநுால் சத்திரம் பகுதியில், வட்டார போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, புதிய வாகன பதிவு, பெயர் மாற்றம், ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட வாகன பதிவு சார்ந்த பல்வேறு பணிகள் நடக்கின்றன.
ஸ்ரீபெரும்புதுாரை சுற்றி ஒரகடம், வல்லம் வடகால், பிள்ளைப்பாக்கம், ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள ஐந்து சிப்காடில், 1,000க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இதனால், இப்பகுதியை சுற்றி குடியிருப்புகள், தனியார் பள்ளி, கல்லுாரிகள் அசுர வேகத்தில் அதிகரித்து வருகின்றன.
இதனால், புதிய வாகன பதிவு, எப்.சி., புதிய டிரைவிங் லைசென்ஸ், புதுப்பித்தல் உள்ளிட்ட தேவைக்காக, ஸ்ரீபெரும்புதுார் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு, தினமும் 200க்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.
ஆனால், வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் இல்லாததால், ஸ்ரீபெரும்புதுார் -- குன்றத்துார் சாலையில், பட்டுநுால் சத்திரத்தில் வாடகை கட்டடத்தில், இட நெருக்கடியில் ஆர்.டி.ஓ., அலுவலகம் இயங்கி வருகிறது.
இதனால், அலுவலக கோப்புகளை பராமரிக்க முடியாமலும், வாகன பதிவு செய்வதற்கு கூட இடமின்றியும், பொதுமக்கள் அமர இடமில்லாமல் அவதியடைந்து வருகின்றனர்.
அதேபோல், வட்டார போக்குவரத்து அலுவலகம் வாடகை கட்டடத்தில் இயங்குவதால், அதற்கு மாத வாடகையாக. 65,000 ரூபாய் செலுத்துவதுடன், வாகனங்கள் நிறுத்தி பரிசோதனை செய்ய கூட இடமில்லாமல், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையோரம், போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
மேலும், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பார்க்கிங் வசதி இல்லாததால், அலுவலகம் வருவோர் போக்குவரத்து அதிகமுள்ள ஸ்ரீபெரும்புதுார் -- குன்றத்துார் சாலையோராம் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால், நெரிசல் மற்றும் விபத்துகள் தொடர்கதையாக உள்ளது.
எனவே, வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சொந்தமாக புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, அலுவலகம் சார்பில் விடுக்கப்பட்ட தொடர் கோரிக்கையை அடுத்து, ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சிக்குட்பட்ட பூதேரிபண்டை பகுதியில் உள்ள அரசு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி, 2021ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
இதையடுத்து, நான்கு ஆண்டுகளான நிலையில், வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார் காங்., - எம்.எல்.ஏ., செல்வபெருந்தகை, ஸ்ரீபெரும்புதுாரில் வட்டார போக்குவத்து அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் கட்டித்தர வேண்டும் என, சட்டசபையில் கோரிக்கை விடுத்தார்.
ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு ஒதுக்கிய 3 ஏக்கர் நிலத்தில், 6.61 கோடி ரூபாயில் புதிய கட்டடத்திற்கான திட்ட அறிக்கையை தயார் செய்து, அரசின் ஒப்புதலுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அளித்துள்ளனர்.
புதிதாக கட்ட திட்டமிடப்படும் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பதிவறை, கணினி அறை, வாகன ஓட்டிகள் ஓய்வறை, அலுவலக அறை ஆகிய வசதிகளுடன் தரைத்தளம் மற்றும் முதல் தளம் என, 9,640 சதுரடியில் கட்டடமும், 16,813 சதுரடியில் வாகன சோதனை இடமும் இடம்பெற உள்ளன.
பொதுப்பணித்துறை கட்டடம் கட்டுவதற்கான கருத்துரு அரசுக்கு அனுப்பிய நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. விரைவில் நிதி ஒதுக்கீடு செய்து, வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும், வாகன சோதனைக்கும் தேவையான கட்டட வசதியை மேற்கொள்ள வேண்டும் என, வாகன ஓட்டிகளிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இது குறித்து, வட்டார போக்குவரத்து அதிகாரி கூறுகையில், 'அலுவக கட்டடம் கட்ட அரசின் நிதி ஒதுக்கீடு நிலுவையில் உள்ளது. நிதி ஒதுக்கி ஆணை பிறப்பித்த உடன், கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஆறு மாதங்களில் புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம் பயன்பாட்டிற்கு வரும்' என்றார்.