/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் அதிகாரிகள், அரசியல்வாதிகள் சிண்டிகேட் வெளிப்படை தன்மை இல்லை என ஒப்பந்ததாரர் புகார்
/
வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் அதிகாரிகள், அரசியல்வாதிகள் சிண்டிகேட் வெளிப்படை தன்மை இல்லை என ஒப்பந்ததாரர் புகார்
வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் அதிகாரிகள், அரசியல்வாதிகள் சிண்டிகேட் வெளிப்படை தன்மை இல்லை என ஒப்பந்ததாரர் புகார்
வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் அதிகாரிகள், அரசியல்வாதிகள் சிண்டிகேட் வெளிப்படை தன்மை இல்லை என ஒப்பந்ததாரர் புகார்
ADDED : ஜன 09, 2025 08:07 PM
காஞ்சிபுரம்:வட்டார வளர்ச்சி அலுவலகங்களில், வெளிப்படை தன்மையுடன் ஒப்பந்த பணிகள் நடைபெறவில்லை எனவும், அதிகாரிகள், அரசியல்வாதிகள் சிண்டிகேட் அமைத்து செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும், டெண்டர் பணிகள் ரகசியமாக மேற்கொள்ளப்படுவதாக, ஒப்பந்ததாரரே நேரடியாக கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் 274 ஊராட்சிகள் உள்ளன.
கிராமப்புறங்களில் கட்டடம், சாலை, குடிநீர் குழாய், சுடுகாடு, பள்ளி கட்டடம், கழிப்பறை என, எந்த வகையான வளர்ச்சி பணிகளும், பொது நிதி, மத்திய நிதிக்குழு மானியம், மாநில நிதிக்குழு மானியம், கனிமவள நிதி, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் நிதி என, பல்வேறு நிதிகளில் தேர்வு செய்யப்படும் வளர்ச்சி பணிகளுக்கு, பி.டி.ஓ., அலுவலகம் வாயிலாக, 'டெண்டர்' விட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன
பெரும்பாலான பி.டி.ஓ., அலுவலகங்களில், ஒன்றியக்குழு சேர்மனமாக ஆளுங்கட்சியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் இருப்பதால், பெரும்பாலான வளர்ச்சி பணிகளின் டெண்டர்கள் வெளிப்படை தன்மை இல்லாமல் விடுவதாக புகார் எழுந்தபடி உள்ளது.
குறிப்பாக, ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒன்றியக்குழு சேர்மன், துணை சேர்மன் ஆகியோர், தனக்கு வேண்டிய ஒப்பந்ததாரரை வைத்து, வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டிய டெண்டர் பணிகளை, சிண்டிக்கேட் முறையில் மறைமுக டெண்டராக விடுகின்றனர்.
இதனால், ஒப்பந்தம் எடுக்க பதிவு செய்து காத்திருக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு வேலை கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வாயிலாக, 5 - 10 பணிகள் வரை குழு ஒப்பந்தமாக விடுவதால், பதிவு செய்த ஒப்பந்ததாரர்களால் எடுக்க முடியாத சூழல் நிலவி வருகிறது.
மேலும், ஊராட்சிகளில் விடப்படும் டெண்டரும், ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒன்றியக்குழு சேர்மன்கள் நேரடியாக தனக்கு சாதகமான ஒப்பந்ததாரருக்கு ஒதுக்கீடு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சிகளில் எந்த ஒரு பணிகளும் செய்ய முடியவில்லை என, பதிவு செய்த ஒப்பந்ததாரர்கள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டெண்டர் விடுவது வெளிப்படை தன்மையாக இருக்க வேண்டும் என, ஒப்பந்ததாரர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து புகாராக மாவட்ட கலெக்டரிடம், ஒப்பந்ததாரர் ஒருவர் அளித்துள்ளார். இந்த புகாரையடுத்து, டெண்டர் விடும் பணியை, பி.டி.ஓ., அலுவலகம் ரத்து செய்துள்ளது.
உதாரணமாக, வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், நேற்று முன்தினம், 27 விதமான பணிகளுக்கு, 2.30 கோடி ரூபாய் மதிப்பில் ஒன்றிய பொது நிதி பணிகளுக்கு டெண்டர் விடுவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
இந்த டெண்டர் அட்டவணையை, ஒப்பந்தம் பதிவு செய்த ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கவில்லை. திறந்தவெளி ஒப்பந்தமும் வழங்கவில்லை.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த நபர்களே, யார் யாருக்கு எவ்வளவு பணிகள் வேண்டும் என, சிண்டிகேட் போட்டு பிரித்து எடுத்துக் கொண்டது, நிர்வாகத்தின் வெளிப்படை தன்மை பற்றி கேள்வி எழுப்பியுள்ளது.
இதுபோன்ற சிண்டிகேட் அமைப்பதற்கு, அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆளுங்கட்சியின் கைப்பாவையாக இருப்பதால், முறைகேடுகளுக்கு வழிவகுக்கிறது.
முறைகேடுகள் வாயிலாக கிடைக்கும் கமிஷன், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பிரித்துக் கொள்வதாக கடுமையான விமர்சனங்கள் எழுகின்றன. ஒத்துழைப்பு அளிக்காத அலுவலர்களை, மாவட்ட செயலர் மற்றும் அமைச்சர்களை சந்தித்து இடமாறுதல் செய்வது உள்ளூர் அரசியல்வாதிகளின் வாடிக்கையாக தொடர்கிறது.
இதுகுறித்து, வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரம் கிராமத்தைச் சேர்ந்த பணி ஒப்பந்தம் எடுக்க பதிவு செய்த ஒப்பந்ததாரர் ஜீவா, காஞ்சிபுரம் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியதாவது:
நான் ஊரக வளர்ச்சி துறையில் செய்யப்படும் வளர்ச்சி பணிகளை செய்வதற்கு ஒப்பந்ததாரராக பதிவு செய்துள்ளேன். பெரும்பாலான வட்டார வளர்ச்சி அலுவலகங்களில், அவரவருக்கு ஏற்ப மறைமுக ஒப்பந்தம் வழங்கி, வளர்ச்சி பணிகள் ரகசியமாக செய்யப்படுகிறது. திறந்தவெளி ஒப்பந்தங்கள் வழங்குவதில்லை.
மேலும், ஒப்பந்தப்புள்ளி அழைப்பு வழங்குவதில்லை. முறைகேடாக நடைபெறும் ஒப்பந்தங்களை நிறுத்தி வைக்க வேண்டும். திறந்தவெளி முறையில் ஒப்பந்தப்புள்ளி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாலாஜாபாதில் இரண்டு நாட்களுக்கு முன் நடைபெறவிருந்த ஒப்பந்தம், நிர்வாகம் நலன் கருதி நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பின், மற்றொரு நாளில் நடந்த முடிவு செய்துள்ளோம். வேறு எந்த ஒரு நோக்கமும் இல்லை.
ஊரக வளர்ச்சி அலுவலர்,
வாலாஜாபாத்.