/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி வளர்ச்சிக்காக பிற துறைகளின் பங்களிப்பு...எதிர்பார்ப்பு:திட்டங்களை நிறைவேற்ற அழைக்கிறது மாநகராட்சி
/
காஞ்சி வளர்ச்சிக்காக பிற துறைகளின் பங்களிப்பு...எதிர்பார்ப்பு:திட்டங்களை நிறைவேற்ற அழைக்கிறது மாநகராட்சி
காஞ்சி வளர்ச்சிக்காக பிற துறைகளின் பங்களிப்பு...எதிர்பார்ப்பு:திட்டங்களை நிறைவேற்ற அழைக்கிறது மாநகராட்சி
காஞ்சி வளர்ச்சிக்காக பிற துறைகளின் பங்களிப்பு...எதிர்பார்ப்பு:திட்டங்களை நிறைவேற்ற அழைக்கிறது மாநகராட்சி
ADDED : ஏப் 22, 2025 11:49 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகர வளர்ச்சிக்கான திட்டங்களை ஒருங்கிணைந்து செயல்படுத்த வருமாறு, அரசின் பல்வேறு துறைகளுக்கும் மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. திட்டங்களை பட்டியலிட்டு, துறைகளின் உயர் மட்ட அதிகாரிகளுடன், மாநகராட்சி அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், உள்ளூர், வெளியூர்வாசிகள் வசதிக்காக, பேருந்து நிழற்குடை கட்டுவது, சாலை அமைப்பது, கோவில்களை சுற்றி கழிப்பறை கட்டுவது போன்ற திட்டங்களை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
அதேசமயம், நகருக்குள் இருக்கும் நீர்நிலைகள், நெடுஞ்சாலை போன்றவை சீரமைக்க அந்தந்த துறை சார்பில், எதிர்கால திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
வலியுறுத்தல்
அதைத்தான், மாநகராட்சி நிர்வாகம் தற்போது வலியுறுத்தி வருகிறது. சமீபத்தில் நடந்த மாநகராட்சி கூட்டத்திலும், இந்த விவகாரம் குறித்து விரிவாக பேசப்பட்டுள்ளது.
அந்த வகையில், காஞ்சிபுரம் நகரில் உள்ள காமராஜர் சாலை, காந்தி சாலை, செங்கழுநீரோடை வீதி, இந்திராகாந்தி சாலை, மேட்டுத்தெரு என, முக்கிய சாலைகள் அனைத்தும் நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்த சாலைகளில், ஏற்கனவே உள்ள மழைநீர் கால்வாய் அனைத்தும் கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது.
நடைபாதை முழுதும் ஆக்கிரமிப்பில் உள்ளன. நடைபாதை, மழைநீர் கால்வாயை சீரமைத்து, மக்கள் பயன்படுத்தும் வகையில், நெடுஞ்சாலைத்துறை மேம்படுத்த வேண்டும்.
அதேபோல, காஞ்சிபுரம் நத்தப்பேட்டை, தேனம்பாக்கம், பொன்னேரிக்கரை ஆகிய ஏரிகளில், பறவைகள் சரணாலயம் அமைக்க, நீர்வளத்துறையும், சுற்றுலா துறையும் அரசுக்கு கருத்துரு அனுப்பி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக, காஞ்சிபுரம் மாநகராட்சியில், ஹிந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலாத் துறை மற்றும் இதர துறைகளுடன் இணைந்து, வெளியூர் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என, மாநகராட்சி நீண்ட பட்டியலை தயாரித்துள்ளது.
இது சம்பந்தமாக, ஒருங்கிணைந்த கள ஆய்வு அறிக்கையை, மாநகராட்சி நிர்வாகம் கலெக்டரிடம் சமர்ப்பித்துள்ளது.
காஞ்சிபுரம் வளர்ச்சிக்காக, மாநகராட்சி நிர்வாகம் மட்டுமின்றி, பிற துறைகளும் கைகோர்த்து திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என, மாநகராட்சி நிர்வாகம் எதிர்பார்க்கிறது.
உத்தரவு
இது தொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு துறைகளின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட நீர்வளத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'காஞ்சிபுரத்தில் நத்தப்பேட்டை, வையாவூர் ஏரிகளில் பறவைகள் சரணாலயம் அமைப்பது தொடர்பாக நாங்கள் ஏற்கனவே, நீதிமன்ற உத்தரவின்படி அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம்.
'தேனம்பாக்கம், பொன்னேரிக்கரை ஆகிய ஏரிகளில் சரணாலயம் அமைப்பது பற்றி, எங்கள் தலைமை பொறியாளர் தான் முடிவு செய்வார்' என்றார்.
திட்டங்களை முன்னெடுப்போம்
காஞ்சி வளர்ச்சிக்காக அரசு துறைகள் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து பட்டியல் தயாரித்து அனுப்பி உள்ளோம். துறைகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளோம். தொடர்ந்து, பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து செயல்படுத்துவோம்.
- எம். மகாலட்சுமி,
காஞ்சி மாநகராட்சி மேயர்.