/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தேனம்பாக்கம் முனீஸ்வரன் சிலைகளில் இரும்பு தவிர்த்து செப்பு கம்பி பயன்பாடு
/
தேனம்பாக்கம் முனீஸ்வரன் சிலைகளில் இரும்பு தவிர்த்து செப்பு கம்பி பயன்பாடு
தேனம்பாக்கம் முனீஸ்வரன் சிலைகளில் இரும்பு தவிர்த்து செப்பு கம்பி பயன்பாடு
தேனம்பாக்கம் முனீஸ்வரன் சிலைகளில் இரும்பு தவிர்த்து செப்பு கம்பி பயன்பாடு
ADDED : மார் 14, 2025 12:15 AM

காஞ்சிபுரம் தேனம்பாக்கம் பச்சையம்மன் கோவிலில், புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள முனீஸ்வரன் சுதை சிலைகளை, நீண்ட கால உறுதித் தன்மைக்காக, செப்பு கம்பி மற்றும் பாரம்பரிய கலவையை பயன்படுத்தி, மாமல்லபுரம் சிற்பக் கலைஞர் வடித்துள்ளார்.
பழங்கால கோவில்களின் கற்சிலை மட்டுமின்றி, சுதை சிலைகளும் குறிப்பிடத்தக்கவை.
அக்காலத்தில் சுதை சிலைகள், நீண்ட கால உறுதித்தன்மைக்காக சுண்ணாம்பு கலவை, கடுக்காய், வெல்லம் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி வடிக்கப்பட்டன.
தற்காலத்தில், கோவில் வழிபாட்டு சிலைகள், அரசியல் உள்ளிட்ட பிரமுகர்களின் சுதை சிலைகள், செங்கற்கள், இரும்புக் கம்பி, கான்கிரீட் கலவை ஆகியவற்றை பயன்படுத்தி வடிக்கப்படுகின்றன.
இத்தகைய சிலைகளில் தண்ணீர் ஊடுருவினால், நாளடைவில் இரும்புக் கம்பிகள் துருப்பிடித்து, சிலை பாதிக்கப்பட்டு சேதமடையும்.
காஞ்சிபுரம், தேனம்பாக்கத்தில், குறிப்பிட்ட பரம்பரையினர் கோவிலாக, மன்னாதர் சுவாமி சமேத பச்சையம்மன் கோவில் விளங்குகிறது.
இக்கோவில் தற்போது புனரமைக்கப்பட்டு, வரும் 16ம் தேதி மஹாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள முனீஸ்வரன் சுதை சிலைகள், நீண்டகால உறுதித்தன்மைக்காக, இரும்புக்கம்பியை தவிர்த்து, செப்புக்கம்பிகள் பயன்படுத்தி வடிக்கப்பட்டுள்ளன.
அரசு கட்டட, சிற்பக்கலைக் கல்லுாரியில் பயின்று பட்டம் பெற்ற, மாமல்லபுரத்தைச் சேர்ந்த சுதை சிற்பக் கலைஞர் ஸ்ரீதரன், 47, இவற்றை வடித்துள்ளார்.
அத்துடன் 21 அடி உயர வால்முனி, 18 அடி உயர செம்முனி, 9 அடி உயர விலங்குமுனி ஆகிய சிலைகளை, அவர் வடித்துள்ளார்.
இதுகுறித்து, ஸ்ரீதரன் கூறியதாவது:
இக்கோவில் மிகவும் பழமையானது. கோவில் விமானம் உள்ளிட்டவை, பழங்காலத்தில் சுண்ணாம்பு கலவையால் செய்யப்பட்டுள்ளன.
நானும் சுண்ணாம்பு கலவையில் புனரமைத்துள்ளேன். இங்கு முனீஸ்வரன் சிலைகள் திறந்தவெளியில் உள்ளன. அவையும் சுண்ணாம்பில் தான் செய்யப்பட்டுள்ளன.
அவை மர வேர்களால், சேதமடைந்தன. அவற்றின் தோற்றம் மற்றும் அளவை புகைப்படம் எடுத்து, அதே அளவில் முற்றிலும் புதிதாக வடித்துள்ளோம்.
சிலைகளில், இரும்புக் கம்பியே பயன்படுத்தாமல், 8 மி.மீ., முதல், 20 மி.மீ., தடிமன் வரையுள்ள செப்புக்கம்பிகளை, தலா 100 கி.கி., வரையும், கான்கிரீட் கலவையும் பயன்படுத்தி உள்ளோம். இதனால், இவை நீண்டகாலம் உறுதியாக இருக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -