/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நாய், கால்நடை தொல்லை அதிகரிப்பு கூட்டத்தில் கவுன்சிலர்கள் புலம்பல்
/
நாய், கால்நடை தொல்லை அதிகரிப்பு கூட்டத்தில் கவுன்சிலர்கள் புலம்பல்
நாய், கால்நடை தொல்லை அதிகரிப்பு கூட்டத்தில் கவுன்சிலர்கள் புலம்பல்
நாய், கால்நடை தொல்லை அதிகரிப்பு கூட்டத்தில் கவுன்சிலர்கள் புலம்பல்
ADDED : செப் 20, 2024 08:01 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம், பேரூராட்சி கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. வாலாஜாபாத் பேரூராட்சி தலைவி இல்லாமல்லி தலைமையில் நடந்த கூட்டத்தில், வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலர் மாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் பேசியதாவது:
கருணாகரன் - தி.மு.க.,: வாலாஜாபாத்தில், அம்ருத் திட்டத்தின் கீழ், குடிநீர் திட்ட பணி நடைபெறுகிறது. இந்த பணிக்காக தெருக்களில் தோண்டிய பள்ளங்களால் சாலை சகதியாக மாறியுள்ளது. அதை சீரமைக்க வேண்டும்.
மாலா - செயல் அலுவலர்: அம்ருத் திட்டப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. பணி முடிந்த பகுதிகளில் பள்ளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது. மற்ற பணிகள் விரைந்து சரிசெய்யப்படும்.
வெங்கடேசன் - தி.மு.க.,: வாலாஜாபாத் பேரூராட்சியின் பல பகுதிகளில், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தோர், வாடகை வீடுகளில் வசிக்கின்றனர்.
இவர்கள், வீட்டு குப்பையை முறையாக தூய்மை பணியாளர்களிடம் வழங்காமல், தங்களது வீட்டு மாடியில் இருந்து பிளாஸ்டிக் கவரில் அடைத்து சாலை மற்றும் தெருக்களில் தூக்கி வீசுகின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
எனவே, இதுகுறித்து வாடகை வீட்டு குடியிருப்பு வாசிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாலா: இது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
தேன்மொழி - அ.தி.மு.க.,: வாலாஜாபாத் பேரூராட்சி, 3வது வார்டு, சேர்க்காடு பகுதியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவில் தெருவில், அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளி எதிரோ உள்ள சாலையில், குழந்தைகள் நலன் கருதி வேகத்தடை அமைக்க வேண்டும்.
மாலா: நடவடிக்கை எடுக்கப்படும்.
மகேஸ்வரி - தி.மு.க.,: உத்திரமேரூர் பேரூராட்சி, 6வது வார்டு, ரங்கப்பிள்ளை தெருவில் மழை வடிநீர் கால்வாய் மற்றும் தெரு சீரமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வேண்டும்.
மாலா: தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
முகமது இஸ்மாயில் - தி.மு.க.,: வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட சாலைகளில், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது.
இதனால், சாலைகளில் திரியும் கால்நடைகள் கட்டுப்படுத்துதல் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
கலைவாணி - தி.மு.க.,: வாலாஜாபாத் பேரூராட்சி சாலைகளில் இரவு, பகலாக தெருக்கள் மற்றும் சாலைகளில் கூட்டம், கூட்டமாக சுற்றி திரியும் தெரு நாய்களால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. கடந்த ஓராண்டில் 15 பேரை தெரு நாய்கள் கடித்துள்ளது.
எனவே, நாய்களுக்கு கருத்தடை ஊசி செலுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மாலா: இது தொடர்பாக, 'ப்ளூ கிராஸ்' அமைப்பிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
விரைவில் பருவமழை காலம் துவங்க உள்ளதால், மழை, வெள்ள பாதிப்பு பகுதிகள் கண்டறிந்து, முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள, கவுன்சிலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.