/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
படுமோசமாக மாறி வரும் காஞ்சி சாலைகள் மாநகராட்சி நிர்வாகம் மீது கவுன்சிலர்கள் அதிருப்தி
/
படுமோசமாக மாறி வரும் காஞ்சி சாலைகள் மாநகராட்சி நிர்வாகம் மீது கவுன்சிலர்கள் அதிருப்தி
படுமோசமாக மாறி வரும் காஞ்சி சாலைகள் மாநகராட்சி நிர்வாகம் மீது கவுன்சிலர்கள் அதிருப்தி
படுமோசமாக மாறி வரும் காஞ்சி சாலைகள் மாநகராட்சி நிர்வாகம் மீது கவுன்சிலர்கள் அதிருப்தி
ADDED : ஏப் 18, 2025 01:31 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், நான்கு மண்டலங்களின் கீழ், 51 வார்டுகளில், 1,000க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. மாநகராட்சியின் இந்த சாலைகளின் இன்றைய நிலைமை, படுமோசமாக காட்சியளிக்கிறது. சாலைகளின் நிலையை பார்த்து புலம்பியபடி, நகரவாசிகள், வாகன ஓட்டிகள் அன்றாடம் சென்று வருகின்றனர்.
மொத்தமுள்ள 51 வார்டுகளில், ஓரிக்கை, செவிலிமேடு போன்ற புறநகர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவதால், அப்பகுதிகளில் சாலைகள் பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், பாதாள சாக்கடை பணிகள் நடைபெறாத 40 வார்டுகளில் உள்ள சாலைகளின் நிலை பற்றி, மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புலம்பியும் இன்று வரை சீரமைக்கப்படவே இல்லை.
பிப்ரவரி மாதம் நடந்த மாநகராட்சி கூட்டத்தில், சாலையின் படுமோசமான நிலை குறித்து ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி கவுன்சிலர்களே சராமாரி குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.
இதற்கு, டெண்டர் விடப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொரு மண்டலத்திற்கும், தலா, 25 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதாக, மாநகராட்சி பொறியாளர் கணேசன் பதில் அளித்திருந்தார்.
இரண்டு மாதங்கள் கழித்தும், சாலைகளின் நிலை சீரமைக்கப்படவே இல்லை. குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் விழுந்து பலர் விபத்துக்குள்ளாகின்றனர்.
குழந்தைகள், முதியோர் விழுந்து காயமடைகின்றனர். ஆனாலும், சாலை சீரமைப்புக்கு தேவையான விரைவான நடவடிக்கை இல்லை என, மாநகராட்சி அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் கடுப்பில் உள்ளனர்.
பெரிய காஞ்சிபுரம், சின்ன காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம் என, நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள அகலமான சாலைகளும் பராமரிப்பின்றி உள்ளது. ஒரு சில சாலைகளை பெயரளவுக்கு சீரமைப்பு செய்த அதிகாரிகள், பெரும்பாலான சாலைகளை அப்படியே விட்டுள்ளனர்.
நவம்பர், டிசம்பர் மாதம் மழை பெய்த பின், சாலை முழுமையாக சீரமைக்கப்படும் என, மேயர் மகாலட்சுமி, அதிகாரிகள் என, அனைத்து தரப்பினரும் தெரிவித்து வந்தனர்.
ஆனால், சாலைகள் மேலும் படுமோசமாக மாறி வருவதால், எப்போது சீரமைப்பார்கள் என, கவுன்சிலர்களிடம் கேட்டு, நகரவாசிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''சாலை சீரமைப்பு தொடர்பாக ஏற்கனவே விடப்பட்ட டெண்டரை எடுக்க யாரும் வராததால், ஒத்தி வைக்கப்பட்டது. இப்போது மீண்டும் டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவாக சாலை சீரமைக்கப்படும்,'' என்றார்.

