/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தவறான சிகிச்சையால் குழந்தை கை அகற்றம் ரூ.10 லட்சம் இழப்பீடு தர கோர்ட் உத்தரவு பெற்றோரின் 32 ஆண்டு போராட்டத்திற்கு தீர்வு
/
தவறான சிகிச்சையால் குழந்தை கை அகற்றம் ரூ.10 லட்சம் இழப்பீடு தர கோர்ட் உத்தரவு பெற்றோரின் 32 ஆண்டு போராட்டத்திற்கு தீர்வு
தவறான சிகிச்சையால் குழந்தை கை அகற்றம் ரூ.10 லட்சம் இழப்பீடு தர கோர்ட் உத்தரவு பெற்றோரின் 32 ஆண்டு போராட்டத்திற்கு தீர்வு
தவறான சிகிச்சையால் குழந்தை கை அகற்றம் ரூ.10 லட்சம் இழப்பீடு தர கோர்ட் உத்தரவு பெற்றோரின் 32 ஆண்டு போராட்டத்திற்கு தீர்வு
ADDED : டிச 19, 2025 05:47 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சையால், குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில், 32 ஆண்டுகளுக்குப்பின், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய், வழங்க, காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்துாரைச் சேர்ந்தவர் ஜெகந்நாதன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு, 1991ல், காஞ்சிபுரம் தாய் - சேய் நல மையத்தில், தினேஷ் என்ற ஆண் குழந்தை பிறந்தது.
இரண்டு நாட்களாக இடைவிடாமல் அழுததால், குழந்தையை, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.
அப்போது, குழந்தையின் வலது கையில், 'ட்ரிப்ஸ்' ஏற்ற ஊசி செலுத்தியுள்ளனர். சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாததால், சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர்.
அப்போது, குழந்தையின் வலது கையில் செலுத்தப்பட்ட ஊசி காரணமாக, ரத்த ஓட்டம் நின்று, தொற்று ஏற்பட்டது. குழந்தையின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் வலது கையை அகற்றினர்.
மருத்துவர்களின் தவறான சிகிச்சையால், குழந்தையின் வலது கை, ஒரு மாதத்திற்குள்ளாகவே அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதால், குழந்தையின் தாய் சாந்தி, 1993ல், காஞ்சிபுரம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு சில ஆண்டுகளிலேயே தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். அதில், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, சுகாதாரத்துறை ஆகியோரை எதிர்தரப்பினராக இணைத்து வழக்கு தொடரவும், 15 லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்க அனுமதி அளித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, காஞ்சிபுரம் சார்பு நீதிமன்றத்தில், 2007ல், வழக்கு தாக்கல் செய்தனர்.
ஆனால், சார்பு நீதிமன்றத்தில் 10 லட்சம் ரூபாய் வரையிலான இழப்பீடு மட்டுமே வழங்க முடியும் என்பதால், அந்த வழக்கு அப்போது முடித்து வைக்கப்பட்டது.
மீண்டும், சென்னை உயர் நீதிமன்றத்தை பெற்றோர் நாடினர். காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கை விசாரிக்க உத்தரவிடப்பட்டது.
அதன்படி, கடந்த ஜூலையில், இவ்வழக்கின் விசாரணை, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் துவங்கியது.
அது முதல் தொடர்ந்து விசாரணை நடந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, தமிழக அரசின் சுகாதாரத்துறை ஆகியோர், இழப்பீடாக 10 லட்சம் ரூபாயும், அதற்கு 6 சதவீத வட்டியும் கணக்கிட்டு வழங்க, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி தீப்தி அறிவுநிதி நேற்றுமுன்தினம் உத்தரவிட்டுள்ளார்.
32 ஆண்டு சட்டப்போராட்டம்
குழந்தை தவறான சிகிச்சையால் கையை இழந்தது, மிகுந்த மன உளைச்சலுடன், கடந்த 1993 முதல் சட்ட போராட்டத்தை ஜெகந்நாதன் மற்றும் சாந்தி தம்பதி துவக்கியுள்ளனர். 32 ஆண்டுகளாக நீதிமன்றங்களில் பல்வேறு வகையில், வழக்கு தொடர்ந்து போராடி வெற்றி பெற்றுள்ளனர்.
கையை இழந்த குழந்தை தினேஷ், தற்போது, 34 வயதுடைய நபராகவும், மாற்றுத்திறனாளியாகவும் உள்ளார். வேலைக்கு ஏதும் செல்ல முடியாத நிலையில், அரசு சார்பில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலவச சட்ட உதவி மையம் பங்களிப்பு!
காஞ்சிபுரம் இலவச சட்ட உதவி மையம் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் செயல்படுகிறது. ஜெகந்நாதன், சாந்தி தம்பதி, கடந்த 32 ஆண்டுகளாகவே, இலவச சட்ட உதவி மையத்தின் வாயிலாகவே, நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
பொருளாதாரத்தில் நலிந்தவர்கள், இந்த இலவச சட்ட உதவி மையத்தை அணுகி, அதன்மூலம் பயன்பெறலாம் என, இலவச சட்ட உதவி மையத்தின் வழக்கறிஞர் கீதா தெரிவித்துள்ளார்.

