/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாதில் 30 ஆண்டுகளாக தொடரும் நெரிசலுக்கு... கிடைக்குது தீர்வு!:புறவழிச்சாலை பணி நிறைவால் 80 கிராம மக்கள் நிம்மதி
/
வாலாஜாபாதில் 30 ஆண்டுகளாக தொடரும் நெரிசலுக்கு... கிடைக்குது தீர்வு!:புறவழிச்சாலை பணி நிறைவால் 80 கிராம மக்கள் நிம்மதி
வாலாஜாபாதில் 30 ஆண்டுகளாக தொடரும் நெரிசலுக்கு... கிடைக்குது தீர்வு!:புறவழிச்சாலை பணி நிறைவால் 80 கிராம மக்கள் நிம்மதி
வாலாஜாபாதில் 30 ஆண்டுகளாக தொடரும் நெரிசலுக்கு... கிடைக்குது தீர்வு!:புறவழிச்சாலை பணி நிறைவால் 80 கிராம மக்கள் நிம்மதி
ADDED : டிச 19, 2025 05:46 AM

வாலாஜாபாத்: வாலாஜாபாதில், 141 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் புறவழிச் சாலை பணி நிறைவு பெற்று, இம்மாத இறுதிக்குள் திறக்க உள்ளதால், 30 ஆண்டுகளாக நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்க உள்ளது. இதனால், 80 கிராம மக்கள், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில் வாலாஜாபாத் மையமாக உள்ளதால், சுற்றிலும் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, வாலாஜாபாத் முக்கிய நகராக உள்ளது.
வாலாஜாபாத் சுற்றுவட்டார பகுதிகளில் தொழிற்சாலைகள் அதிகரிப்பால், வாலாஜாபாத் சாலை வழியில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, காஞ்சிபுரம் செல்லும் வாகனங்கள், சாலவாக்கம் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஒரகடம், படப்பை, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ஏராளமான வாகனங்கள், வாலாஜாபாத் ராஜவீதி சாலை வழியாக இயங்குகின்றன.
மேலும், திருமுக்கூடல், மதுார், சிறுதாமூர், சிறுமையிலுார் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கும் தனியார் கல் குவாரி மற்றும் கிரஷர்களில் இருந்து, லோடு ஏற்றி செல்லும் கனரக வாகனங்களும், வாலாஜாபாத் ராஜவீதி வழியாக சென்று வருகின்றன.
ஒரகடம், தேவரியம்பாக்கம், கட்டவாக்கம், பண்ருட்டி உள்ளிட்ட பகுதி தனியார் தொழிற்சாலைகளில் இருந்து, தொழிலாளர்களை அழைத்து செல்லும் ஏராளமான கம்பெனி பேருந்துகளும் வாலாஜாபாத் சாலை வழியாக செல்கின்றன.
இதனால், வாலாஜாபாத் ராஜவீதி சாலையில் நாளுக்கு நாள் வாகனங்கள் அதிகரித்து, காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பல தரப்பு மக்களும் தினசரி அவதிப்படுகின்றனர்.
இதை தவிர்க்க வாலாஜாபாதில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதனிடையே, சென்னை- - கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு - சதுரங்கப்பட்டினம் சாலை, 448 கோடி ரூபாய் செலவில் நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி, 2022ம் ஆண்டில் துவங்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, வாலாஜாபாத் புறவழிச்சாலை அமைக்க, 141.59 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதன்படி, காஞ்சி - செங்கை சாலையில், வெண்குடி அருகே துவங்கி கிதிரிப்பேட்டை வழியாக புளியம்பாக்கம் சாலையை சென்றடையும் வகையில், 6.5 கி.மீ., துாரத்திற்கான பைபாஸ் சாலை அமைக்கும் பணி துவங்கியது.
கடந்த 2022ல் துவங்கிய இச்சாலை பணி, 2024 மார்ச்சில் முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், அதற்கான ஒப்பந்த காலம் முடிவுற்று ஓன்றரை ஆண்டுக்கு மேலாகியும், அப்பணி முடியாமல் இருந்தது.
புறவழிச்சாலை பணிகள் மற்றும் ரயில்வே கடவு பாதைகளில் மேம்பாலம் அமைப்பதில் ஏற்பட்ட நிர்வாக சிக்கலால் பணிகளில் தாமதம் ஏற்பட்டது.
தற்போது, வாலாஜாபாத் புறவழிச்சாலைக்கான பணிகள் முழுதுமாக நிறைவு பெற்று பயன்பாட்டிற்காக தயார் நிலையில் உள்ளது.
புதிய புறவழிச்சாலை பயன்பாட்டுக்கு வரும் நிலையில், காஞ்சிபுரத்தில் இருந்து, செங்கல்பட்டு நோக்கி செல்லும் வாகனங்கள், வெண்குடி கிராமத்தில் துவங்கும் மேம்பாலத்தில் ஏறி, கிதிரிப்பேட்டை, ஊத்துக்காடு, புளியம்பாக்கம் மேம்பாலத்தின் வழியாக இறங்கி செல்லலாம்.
செங்கல்பட்டு பகுதியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி செல்லும் வாகனங்கள், புளியம்பாக்கம் அருகே துவங்கும் மேம்பாலத்தின் மீது ஏறி, ஊத்துக்காடு, கிதிரிப்பேட்டை வழியாக வெண்குடி கிராமம் வழியாக செல்லலாம். இதனால், போக்குவரத்து நெரிசல் தீரும்.
இதுகுறித்து, சென்னை -- கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வாலாஜாபாத் புறவழிச்சாலை பணி நிறைவு பெற்றுள்ளது. புளியம்பாக்கம் ரயில் கடவுப்பாதையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ரயில்வே துறையிடம் அனுமதி பெறுதல், புறவழிச்சாலைக்கான தடத்தில் பள்ளமான பகுதிகளை சமன் செய்ய தேவையான மண் கிடைத்தல் போன்ற காரணங்களால், பணிகளை முடிக்க கூடுதல் கால அவகாசம் தேவைப்பட்டது.
அப்பணிகள் அனைத்தும் முடிந்துள்ளன. புறவழிச்சாலையில் சோலார் விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் முடிந்துள்ளன. இந்த சாலை இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாலாஜாபாத் நகருக்கு, சுற்று வட்டாரத்தில் உள்ள 80க்கும் மேற்பட்ட கிராம மக்கள், வணிக ரீதியாக தினமும் வந்து செல்கின்றனர். மேலும், இங்குள்ள தாலுகா அலுவகலம், பி.டி.ஓ., அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், காவல் நிலையம் போன்ற அரசு அலுவலக பணி சார்ந்தும் ஏராளமானோர் வருகின்றனர். இதனால், வாலாஜாபாதில் குறுகியதான சாலை கொண்ட ராஜவீதியில் போக்குவரத்து நெரிசல் ஏறபட்டு வாகன ஓட்டிகள் திண்டாடுகின்றனர். கடந்த 1990ம் ஆண்டில் இருந்து இப்பிரச்னை தொடர்கிறது. தற்போது புறவழிச்சாலை அமைந்துள்ளதால், வாலாஜாபாத் ராஜவீதியில் குறைவான வாகனங்கள் இயக்கப்படும் நிலை உருவாகி, நெரிசல் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். - சி.முனுசாமி முத்தாலம்மன் கோவில் தெரு வாலாஜாபாத்.
புறவழிச்சாலையால் பயன்கள்
* உத்திரமேரூர் ஒன்றியத்தில் இயங்கும் கல் குவாரி மற்றும் கிரஷர்களில் இருந்து வரும் கனரக வாகனங்கள், வாலாஜாபாதிற்குள் சாலை வழியாக இயங்காமல், புறவழிச்சாலையில் செல்லும் என்பதால் விபத்து அபாயம் குறையும் * வாலாஜாபாத் வழியாக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு செல்லும் அவசரகால 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை, நெரிசல் இன்றி விரைவாக செல்லும் * புளியம்பாக்கம், சங்கராபுரம், பழையசீவரம் மற்றும் திருமுக்கூடல் சுற்றி உள்ள 50 கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்கள், வாலாஜாபாத் புறவழிச்சாலை வழியாக ஒரகடம் உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்கு குறித்த நேரத்தில் செல்லலாம் * வாலாஜாபாதில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவ - மாணவியர் போக்குவரத்து நெரிசல் இன்றி பள்ளி, சென்று வீடு திரும்ப வழிவகுக்கும்.

