/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிறுபினாயூரில் இருளர் வீடுகள் சேதம் சுவர்கள் விரிசலால் மழைநீர் கசிவு
/
சிறுபினாயூரில் இருளர் வீடுகள் சேதம் சுவர்கள் விரிசலால் மழைநீர் கசிவு
சிறுபினாயூரில் இருளர் வீடுகள் சேதம் சுவர்கள் விரிசலால் மழைநீர் கசிவு
சிறுபினாயூரில் இருளர் வீடுகள் சேதம் சுவர்கள் விரிசலால் மழைநீர் கசிவு
ADDED : செப் 26, 2025 03:48 AM

உத்திரமேரூர்:சிறுபினாயூரில் உள்ள இருளர்களின் வீடுகள் சேதமடைந்துள்ளதால் மழைநீர் கசிந்து, வசிக்க முடியாமல் அவர்கள் சிரமப்படுகின்றனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், சிறுபினாயூர் ஊராட்சியில், இருளர்கள் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில், 30 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த குடும்பங்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன், வீட்டு மனைகள் வழங்கப்பட்டன. பின், 2020 -- 21ம் நிதியாண்டில், முதல்வரின் சூரிய சக்தியால் இயங்கும் பசுமை வீடு திட்டத்தின் கீழ், 3 லட்சம் ரூபாய் செலவில், 30 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து, குடியிருப்பு பகுதியில் மின்விளக்கு, சாலை, குடிநீர் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன. தற்போது, இந்த குடியிருப்பில் உள்ள வீடுகளின் கான்கிரீட் கூரைகள், பக்கவாட்டு சுவர்கள் சேதமடைந்து விரிசல் ஏற்பட்டு உள்ளன.
மழை நேரங்களில், கூரை மற்றும் சுவர்களில் இருந்து மழைநீர் கசிந்து உள்ளே வழிவதால், இருளர்கள் குடும்பத்தினர், குழந்தைகளோடு வசிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
அந்த நேரங்களில், வீட்டருகே அமைக்கப்பட்டுள்ள கூரை கொட்டகையில் வசிக்கும் நிலையே உள்ளது. மேலும், சேதமடைந்து வரும் வீடுகளை சீரமைக்க, குடியிருப்பு மக்கள் பல்வேறு அரசு குறைதீர் முகாம்களில் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
சிறுபினாயூர் இருளர் குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:
எங்களின் வீடுகள் நான்கு ஆண்டுகளிலேயே கான்கிரீட் கூரை சேதம் அடைந்து, மழை நேரத்தில் தண்ணீர் வழிகிறது. தொடர்ந்து, வீடுகளின் பக்கவாட்டு சுவரிலும் விரிசல் ஏற்பட்டு வருகிறது. சேதமடைந்துள்ள வீடுகளை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.