/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காதை செவிடாக்கும் ‛ 'ஏர்ஹாரன்கள்' கண்காணிப்பு இல்லாததால் அதிகரிப்பு
/
காதை செவிடாக்கும் ‛ 'ஏர்ஹாரன்கள்' கண்காணிப்பு இல்லாததால் அதிகரிப்பு
காதை செவிடாக்கும் ‛ 'ஏர்ஹாரன்கள்' கண்காணிப்பு இல்லாததால் அதிகரிப்பு
காதை செவிடாக்கும் ‛ 'ஏர்ஹாரன்கள்' கண்காணிப்பு இல்லாததால் அதிகரிப்பு
ADDED : ஆக 28, 2025 01:40 AM
காஞ்சிபுரம்:போக்குவரத்து துறை அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாததால், அதிக ஒலி எழுப்பி, ஒலி மாசு ஏற்படுத்துவதோடு, காதை செவிடாக்கும் வகையில் 'ஏர்ஹாரன்' பயன்படுத்தும் வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
மோட்டார் வாகன சட்டப்படி, 70 'டெசிபல்' அளவுக்கு ஒலி எழுப்பும் ஹாரன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிலும், தேவைப்படும்போது மட்டும் ஒலி எழுப்ப வேண்டும் என்ற விதி உள்ளது.
அதற்கு மேல் உள்ள டெசிபலுக்கு மேல், ஒலி எழுப்பும் 'ஹாரன்' சத்தத்தால், காது கேளாமை பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், காஞ்சிபுரத்தில், போக்குரவத்து அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாததால், விதிகளை மீறி, அதிக ஒலி எழுப்பும், 'ஏர் ஹாரன்' பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
சுற்றுலா ஸ்தலமான காஞ்சிபுரத்திற்கு பட்டுசேலை எடுக்கவும், கோவில்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர், கார், வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் வருகின்றனர்.
இதனால், வாகன நெரிசல் மிகுந்த சாலையில் செல்லும் சில தனியார் பேருந்து, சரக்கு வாகனங்களில், அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை பயன்படுத்துகின்றனர்.
இதனால் மற்ற வாகன ஓட்டிகள் பதற்றமடைகின்றனர். நெரிசல் மிகுந்த சாலைகளில், இளைஞர்கள் டூ - வீலர்களில் செல்லும்போது, விலங்குகள் அலறுவது போல் ஹாரன்களை அடித்து செல்கின்றனர்.
இதனால், கர்ப்பிணியர், பச்சிளம் குழந்தைகள், முதியோர், நோயாளிகள் உள்ளிட்டோர் திடீரென ஏற்படும் அதிக சத்ததால் பாதிக்கப்படுகின்றனர்.
தொடர்ந்து அதிக ஹாரன் ஒலியை கேட்பவர்ளுக்கு காது செவிடாகும் சூழல் உள்ளது.
எனவே, காஞ்சிபுரத்தில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பயன்படுத்தும் வாகனங்களை பறிமுதல் செய்து வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்து போலீசாரும், வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் கூறியதாவது:
காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில், அதிக பாரம், தகுதி சான்று, அனுமதி சீட்டு உள்ளிட்ட பல்வேறு விதிமீறல் வாகனங்களை ஆய்வு செய்து வருகிறோம். அபராதம் விதித்து, விதிமீறலின் தன்மைக்கேற்ப வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறோம் .
இருப்பினும், வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.