/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஊராட்சிகள்தோறும் வனக்குழு ஏற்படுத்த முடிவு அடங்காத காட்டுப்பன்றிகளை சுட்டுப்பிடிக்க முடிவு
/
ஊராட்சிகள்தோறும் வனக்குழு ஏற்படுத்த முடிவு அடங்காத காட்டுப்பன்றிகளை சுட்டுப்பிடிக்க முடிவு
ஊராட்சிகள்தோறும் வனக்குழு ஏற்படுத்த முடிவு அடங்காத காட்டுப்பன்றிகளை சுட்டுப்பிடிக்க முடிவு
ஊராட்சிகள்தோறும் வனக்குழு ஏற்படுத்த முடிவு அடங்காத காட்டுப்பன்றிகளை சுட்டுப்பிடிக்க முடிவு
ADDED : செப் 21, 2025 11:15 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், ஊராட்சிகள்தோறும் வனக்குழு ஏற்படுத்த வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். அதிக தொல்லை தரும் இடங்களில், காட்டுப்பன்றிகளை சுட்டுப்பிடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து தாலுகாக்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இதில், 381 ஏரிகள் நீர் வளத்துறை கட்டுப்பாட்டிலும்; 380 ஏரிகள் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் என மொத்தம், 761 ஏரிகள் உள்ளன.
தென் மேற்கு மற்றும் வட கிழக்கு ஆகிய இரு பருவ மழைக்கு நிரம்பும் ஏரி உபரி நீர், ஆற்று வெள்ள நீரில், மாவட்டத்தில் இருக்கும் சிற்றேரி, பெரிய ஏரி, தாங்கல், குளம், குட்டை உள்ளிட்ட நீராதாரங்கள் நிரம்பி வருகின்றன. இந்த நீரை பயன்படுத்தி, 45,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.
விவசாயத்தில், காட்டுப்பன்றிகளில் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, நெல் விதைப்பு முதல் அறுவடை வரையில், விவசாயிகள் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது.
உதாரணமாக, வயலில் நெல் விதைத்துவிட்டு சென்றால், நெல் மணிகள் முளைப்பு ஏற்படுவதற்கு முன் வயலில் காட்டுபன்றிகள் ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டுக்கொண்டு வயலில் உருண்டு விதைத்த நெல்லை நாசப்படுத்தி விடுகிறது.
இதேபோல, நெற்பயிர் மற்றும் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்கதிர் வயல்களில் காட்டுப்பன்றிகள் உருண்டு நாசப்படுத்தி வருகின்றன.
இதன் மூலமாக, விவசாயிகளுக்கு மகசூல் இழப்பை ஏற்படுத்தி, வருவாய் இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இதை சரி செய்யும் வகையில், காட்டுப்பன்றிகளில் தொல்லையால் வனத்துறையினர் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் இடை கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஏ.எம்.கண்ணன் கூறியதாவது:
காட்டுப்பன்றிகள் தனித்தனியாக வருவதில்லை. எப்போதும், 20க்கும் மேற்பட்ட பன்றிகள் கூட்டம் கூட்டமாக வருகின்றன. ஆட்கள் நடமாட்டம் இல்லாத போது வயலை நாசப்படுத்திவிட்டு செல்கிறது.
இரவு நேரத்தில் காவலுக்கு இருக்கும் விவசாயியை துரத்தி கடிக்கிறது. பன்றிகளை கட்டுப்படுத்த மின் விளக்கு, ரேடியோ, சத்தம் எழுப்பும் தானியங்கி கருவி உள்ளிட்டவை பொருத்தினால் கூட பயிர்களை நாசப்படுத்துவதை நிறுத்துவதில்லை.
குறிப்பாக, வேர்க்கடலை போட்டால், காட்டுப்பன்றிகளுக்கு போக மீதம் விற்பனைக்கு எடுத்து செல்ல முடிகிறது. தான் செடிகளை மாட்டுக்கு எடுத்து செல்ல வேண்டி உள்ளது.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, இழப்பீடு வழங்க வனத்துறையினரிடம் முறையிட்டும் எவ்வித பலனும் இல்லை. பன்றிகளை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் தொழில் நுட்பங்களை விவசாயிகள் கையாண்டால், அதை காட்டுப்பன்றிகள் கண்டுக்கொள்வதில்லை. ஆகையால், சுட்டுப்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருக்கும், ஊராட்சிதோறும் தலா ஒரு வனக்குழு ஏற்படுத்த உள்ளோம். இதில், கிராம நிர்வாக அலுவலர், வனசரகர், வனவர், ஊராட்சி தலைவர், முன்னோடி விவசாயிகள் என, ஐந்து நபர்கள் அடங்கிய குழுவினர் இடம் பெறுவர்.
அதிகமாக தொல்லை கொடுக்கும் இடங்கள் மற்றும் பன்றிகள் செல்லும் வழித்தடத்தை அறிந்து, குழுவினரின் தீர்மானத்தின் படி சுட்டுப்பிடிக்க உள்ளோம். மேலும், காப்பு காடு சுற்றியுள்ள வனப்பரப்பு தவிர்த்து, பிற அனைத்து இடங்களிலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.