/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அரசு மருத்துவமனைகளில் முதல்வர் மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் சிகிச்சை பெறுவோர் சரிவு!
/
அரசு மருத்துவமனைகளில் முதல்வர் மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் சிகிச்சை பெறுவோர் சரிவு!
அரசு மருத்துவமனைகளில் முதல்வர் மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் சிகிச்சை பெறுவோர் சரிவு!
அரசு மருத்துவமனைகளில் முதல்வர் மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் சிகிச்சை பெறுவோர் சரிவு!
ADDED : ஆக 16, 2024 11:40 PM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், முதல்வர் மருத்துவக் காப்பீடுத் திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளைவிட தனியார் மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். நான்கு ஆண்டுகளில், அரசு மருத்துவமனைகளில், 28,000 நோயாளிகள் சிகிச்சை பெற்ற நிலையில், தனியாரிடம் 45,000 நோயாளிகள் சிகிச்சை பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.
அரசு, தனியார் மருத்துவமனைகளில், குறிப்பிட்ட சில முக்கியமான சிகிச்சைகளை பெறவும், சில தொடர் சிகிச்சைகளையும், தனியார் ஆய்வகங்களில் முக்கியமான பரிசோதனை செய்து கொள்ளவும், முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டம், கடந்த 2009ல் துவங்கி தற்போது வரை பயன்பாட்டில் உள்ளது.
இந்த திட்டத்தின் வாயிலாக, தமிழக அளவில், 1.37 கோடி குடும்பங்கள், மருத்துவக் காப்பீட்டு அட்டை பெற்றுள்ளனர். இதன் வாயிலாக, 1,090 சிகிச்சைகளும், 8 தொடர் சிகிச்சைகளும், 52 ஆய்வக பரிசோதனைகளும் செய்து கொள்கின்றனர்.
இத்திட்டத்தில், ஆண்டொன்றுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை இலவசமாக சிகிச்சை பெறலாம். அரசு, தனியார் என இரு வகையான மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற முடியும் என்பதால், இரு வகையான மருத்துவமனைகளிலும் நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.
ஆனால், அரசு மருத்துவமனைகளைக் காட்டிலும், தனியார் மருத்துவமனைகளில், இத்திட்டத்தின் கீழ் அதிகளவில் நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர் என்பது ஆண்டுதோறும் பதிவாகும் புள்ளிவிபரங்கள் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2.65 லட்சம் குடும்பங்கள், முதல்வரின் மருத்துவக் காப்பீடு பெற்றுள்ளனர். இத்திட்டம் துவங்கிய, 2009ம் ஆண்டு முதல், 162.46 கோடி ரூபாய் மதிப்பிலான சிகிச்சைகளை, 73,669 நோயாளிகள் பெற்றுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஐந்து அரசு மருத்துவமனைகளிலும், 15 தனியார் மருத்துவமனைகள் என, 20 மருத்துவமனைகளில், மருத்துவக் காப்பீடு வாயிலாக சிகிச்சை பெறலாம்.
இந்த மருத்துவமனைகளில், கடந்த 2021 முதல் 2024ம் ஆண்டு வரையிலான, நான்கு ஆண்டுகளில், 28,651 நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில், 29.80 கோடி ரூபாய் மதிப்பில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
அதேசமயம், தனியார் மருத்துவமனைகளில், 45,015 நோயாளிகள், 86.69 கோடி ரூபாய் மதிப்பில் சிகிச்சை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
அரசு மருத்துவமனைகளைக் காட்டிலும், நான்கு ஆண்டுகளில், 56.89 கோடி ரூபாய்க்கு, 16,361 நோயாளிகள் கூடுதலாக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். முதல்வரின் மருத்துவக் காப்பீடு அட்டை வாயிலாக, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற ஏதுவாக இருப்பதாக நோயாளிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, பல தனியார் மருத்துவமனைகளில் அரசின் இந்த மருத்துவ அட்டையை பயன்படுத்த முடியவில்லை.
அதிகளவில் தனியார் மருத்துவமனைகளிலும், அரசின் மருத்துவக் காப்பீடு அட்டை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மருத்துவ காப்பீடு திட்ட அதிகாரி கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 15 தனியார் மருத்துவமனைகளில் காப்பீட்டு அட்டையை பயன்படுத்தி சிகிச்சை பெற முடியும். மக்களும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற ஆர்வம் காட்டுவதால், இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகள் தான் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வேண்டும்.
இதைத் தொடர்ந்து, மருத்துவமனைகளில் ஆய்வு செய்த பிறகு, அரசு அங்கீகாரம் வழங்கும். சில தனியார் மருத்துவமனைகள் விண்ணப்பம் செய்யவில்லை. மருத்துவக் காப்பீடுத் திட்ட அட்டையை பயன்படுத்தி ஏராளமானோர் தொடர் சிகிச்சை பெறுகின்றனர்.
குறிப்பாக, டயாலிசிஸ், கீமோ தெரபி போன்ற தொடர் சிகிச்சைகளுக்கு, முதல்வரின் காப்பீடுத்திட்ட அட்டை பெரிய அளவில் உதவுகிறது.
காரைப்பேட்டையில் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில், பெரும்பாலான சிகிச்சைகள், மருத்துவக் காப்பீடு அட்டை திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
அதேபோல், ஏராளமான அறுவை சிகிச்சைகள் இத்திட்டத்தின் கீழ் நடந்துள்ளது. இவற்றை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.