/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெல் கொள்முதல் நிலையம் திறப்பில்... இழுத்தடிப்பு:முளை விடும் அச்சத்தில் விவசாயிகள்
/
நெல் கொள்முதல் நிலையம் திறப்பில்... இழுத்தடிப்பு:முளை விடும் அச்சத்தில் விவசாயிகள்
நெல் கொள்முதல் நிலையம் திறப்பில்... இழுத்தடிப்பு:முளை விடும் அச்சத்தில் விவசாயிகள்
நெல் கொள்முதல் நிலையம் திறப்பில்... இழுத்தடிப்பு:முளை விடும் அச்சத்தில் விவசாயிகள்
ADDED : ஆக 27, 2025 02:22 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை துவக்க, கலெக்டர் அனுமதி அளித்தும், நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் திறக்காமல் இழுத்தடிக்கின்றனர். இதனால், குவியலாக வைத்துள்ள நெல் முளைப்பு விடும் என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து தாலுகாக்களில், 1.20 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. இவற்றில், சம்பா, நவரை, சொர்ணவாரி ஆகிய மூன்று பருவங்களில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.
சம்பா மற்றும் நவரை பருவங்களில் சாகுபடி செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்வதற்கு, சில கிராமங்களில் நுகர்பொருள் வாணிப கழகத்தினர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை துவக்கி, நெல் கொள்முதல் செய்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் துவங்கும் சொர்ணவாரி பருவத்தில், 13,500 ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் நெல் விவசாயம் செய்தனர். அவை அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.
ஒப்புதல் இவற்றில், படுநெல்லி, சிறுவாக்கம், புள்ளலுார், கம்மவார்பாளையம், கோவிந்தவாடி, புதுப்பாக்கம் உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயிகள் நெல் அறுவடை செய்து, குவியல் குவியலாக கொட்டி வைத்துள்ளனர்.
நெல் விற்பனைக்கு வியாபாரிகளை தொடர்பு கொண்டால், 80 கிலோ அடங்கிய நெல்லின் விலை, 1,250 ரூபாய்க்கு மேல் விற்கவில்லை என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கினால், அதே எடையுள்ள நெல் மூட்டைக்கு கூடுதல் விலை கிடைக்கும் என, விவசாயிகள் இடையே கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள், கடந்த மாதம் தேவையான கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை துவக்குவதற்கு ஆய்வு செய்தனர். அதன்படி, 65 இடங்களை தேர்வு செய்து, கலெக்டரிடம் ஒப்புதல் பெற்று உள்ளனர்.
ஒப்புதல் பெற்று ஒரு மாதமாகியும், அரசு நெல் கொள்முதல் நிலையங்களை துவக்கவில்லை. இதனால், குவியலாக வைத்துள்ள நெல் நிறம் மாறும் அபாயம் மற்றும் முளைப்பு வந்து விடும் அபாயம் உள்ளது என, விவசாயிகள் இடையே புலம்பலை ஏற்படுத்தி உள்ளது.
நடவடிக்கை இது குறித்து, படுநெல்லி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:
நெல் அறுவடை செய்து, ஒரு மாதமாக சேமித்து வைத்துள்ளோம். பகலில் வெயில் அடிக்கிறது; இரவு நேரங்களில் மழை பெய்வதால், நெற்களங்களில் சேமித்து வைத்திருக்கும் நெல் குவியலுக்குள் மழைநீர் புகுந்து விடுமோ என்ற அச்சம் உள்ளது.
கலெக்டர் கலைச்செல்வி, நெல் கொள்முதல் நிலையங்களை துவக்க அனுமதி அளித்து ஒரு மாதமாகியும், நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் திறக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
குவியலில் இருக்கும் நெல், எங்கு முளைப்பு வந்துவிடுமோ என்கிற அச்சம் உள்ளது. அதற்குள் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, காஞ்சிபுரம் மண்டல நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் விலைக்கு பதிலாக, புதிய விலை பதிவேற்றம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
'விவசாயிகள் நலன் கருதி, பணிகளை விரைந்து முடித்து, செப்டம்பரில் அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும், புதிய விலைக்கு நெல் கொள்முதல் செய்யப்படும்' என்றார்.