ADDED : ஏப் 23, 2025 12:49 AM

ஸ்ரீபெரும்புதுார்:மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்குதல், 100 நாள் வேலையை 125 நாளாக உயர்த்துதல், நிலுவை சம்பளத்தை வழங்குதல் உள்ளிட்ட தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, நேற்று, தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த, மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
இப்போராட்டத்தில் பங்கேற்பதற்காக வேலுார், காஞ்சிபுரம், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிளில் இருந்து அரசு பேருந்துகளில் வந்த மாற்றுத்திறனாளிகளை, ஒரகடம் அருகே காரணித்தாங்கல் செக்போஸ்டில் போலீசார் பேருந்துகளை மடக்கி, மாற்றுத்திறனாளிகளை பேருந்தில் இருந்து இறக்கி கைது செய்தனர்.
இதையடுத்து, சிறிது நேரத்திற்கு பின், அவர்களை அங்கிருந்து அனுப்பினர். காலை நேரத்தில் அரசு பேருந்துகளை மடக்கி சோதனை செய்ததால், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் அவதி அடைந்தனர்.
* உத்திரமேரூர் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், சென்னை செல்வதற்காக உத்திரமேரூர் பேருந்து நிலையத்திற்கு நேற்று காலை வந்தனர்.
அப்போது, உத்திரமேரூர் போலீசார் மாற்றுத்திறனாளிகளை கைது செய்து, செங்கல்பட்டு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதையடுத்து, தனியார் திருமண மண்டபத்தில் சங்க மாவட்ட செயலர் முனுசாமி தலைமையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

