/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மூன்று மேம்பால திட்டங்கள் கிடப்பில் போட்டதால்...அதிருப்தி:வாலாஜாபாத், செவிலிமேடில் நெரிசலால் திணறல்
/
மூன்று மேம்பால திட்டங்கள் கிடப்பில் போட்டதால்...அதிருப்தி:வாலாஜாபாத், செவிலிமேடில் நெரிசலால் திணறல்
மூன்று மேம்பால திட்டங்கள் கிடப்பில் போட்டதால்...அதிருப்தி:வாலாஜாபாத், செவிலிமேடில் நெரிசலால் திணறல்
மூன்று மேம்பால திட்டங்கள் கிடப்பில் போட்டதால்...அதிருப்தி:வாலாஜாபாத், செவிலிமேடில் நெரிசலால் திணறல்
ADDED : ஏப் 28, 2025 01:42 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், நெடுஞ்சாலைத் துறையால் மேற்கொள்ள வேண்டிய முக்கிய மூன்று திட்டங்கள் செயல்பாட்டுக்கு வராமல் முடங்கியுள்ளன. குறிப்பாக, வாலாஜாபாத், செவிலிமேடு அருகே பாலாற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட பாலம் கட்ட நிதி ஒதுக்காதது, வாகன ஓட்டிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னைக்கு அருகில் பொருளாதாரம், வாகனங்களின் பெருக்கம், மக்கள் தொகை என அனைத்து வகையிலும், காஞ்சிபுரம் மாவட்டம் மிக வேமாக வளர்ச்சியடைந்து வருகிறது. ஆனால், உட்கட்டமைப்பு விஷயத்தில், அரசு திட்டங்கள் பல முடங்கி இருப்பதால், வளர்ச்சியை நோக்கி அடுத்தகட்டம் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், சுற்றியுள்ள மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
அந்த வகையில், நெடுஞ்சாலைத் துறையின் பல்வேறு முக்கிய திட்டங்களை செயல்படுத்த, அரசிடம் இருந்து இசைவு இல்லாததால், கருத்துரு அனுப்பியதோடு திட்ட பணிகள் அப்படியே கிடப்பில் உள்ளன.
குறிப்பாக, நெடுஞ்சாலைத் துறையின் மூன்று திட்டங்கள் எப்போது வரும் என, காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் காத்திருக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2021, நவ., மாதத்தில் பெய்த, பெருமழை காரணமாக, பாலாற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. விநாடிக்கு ஒரு லட்சம் கன அடிநீர், வாலாஜாபாத் அருகே உள்ள தரைப்பாலம் முழுதுமாக சேதமடைந்து, வாகன ஓட்டிகள் பயன்படுத்தவே முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சுற்றியுள்ள 15 கிராமவாசிகள், பல கி.மீ., துாரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
தற்காலிகமாக சீரமைத்த பிறகே, பாலத்தை, வாகன ஓட்டிகள் தற்போது பயன்படுத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம், இப்பாலம் சேதமடைவதும், போக்குவரத்து தடைபடுவதும் தொடர்கதையாகி வருகிறது.
எனவே, வாலாஜாபாத் - அவளூர் இடையேயான 1.5 கி.மீ., துாரத்திற்கு, உயர்மட்ட பாலம் கட்ட வாலாஜாபாத் சுற்றியுள்ள கிராமவாசிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதன் காரணமாக, நெடுஞ்சாலைத் துறையினர் உயர்மட்ட பாலம் கட்ட, 100 கோடி ரூபாய் தேவை என, அரசுக்கு கருத்துரு அனுப்பி உள்ளனர். ஆனால், அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு இதுவரை வழங்கப்படவில்லை.
இரண்டாவது திட்டமாக, காஞ்சிபுரத்திலிருந்து, அரக்கோணம் செல்லும் சாலை, கரியன்கேட் பகுதி ரயில்வே கடவுப்பாதையில், ரயில் செல்லும் நேரங்களில், நீண்ட நேரம், நெடிய துாரம் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
பல ஆண்டுகளாக இப்பிரச்னை நீடிப்பதால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது 2018, ஜூன் 11ல், கரியன்கேட் பகுதியில் மேம்பாலம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு, 42.51 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, வரைபடம் தயார் செய்யப்பட்டது. 2019 ல், நவம்பரில் ரயில்வே துறையின் அனுமதிக்காக, நெடுஞ்சாலைத் துறையின் செங்கல்பட்டு கோட்ட அதிகாரிகள் அனுப்பினர்.
ஐந்து ஆண்டுகளாகியும் இதுவரை, பாலம் கட்டுவதற்கான அறிகுறியே தெரியவில்லை. அதற்கான நிதியும் ஒதுக்கப்படவில்லை.
மூன்றாவதாக, காஞ்சிபுரம் நகருக்கு அருகே உள்ள செவிலிமேடு பகுதியில், பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே உள்ள உயர்மட்ட பாலம் அடிக்கடி சேதமாகி வருவதால், அதன் அருகே புதிதாக உயர்மட்ட பாலம் ஒன்று கட்ட நெடுஞ்சாலை துறையினர் முடிவு செய்தனர்.
இதற்கான ஆய்வு பணிகளையும் அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர். புதிய பாலம் கட்ட 100 கோடி ரூபாய் செலவாகும் எனவும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், அதற்கான கருத்துருவை அரசுக்கு அனுப்பினர். ஆனால், இதுவரை பாலம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை.
இதனால், சேதமடைந்த பாலத்தில் கனரக வாகனங்களும், இலகுரக வாகனங்களும் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வாகன ஓட்டிகள் பலியாகும் சம்பவங்கள் நடக்கின்றன. விரைவாக பாலத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து, செவிலிமேடில் புதிய உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என, வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கரியன்கேட் உயர்மட்ட பாலம் தொடர்பாக, சாலை விரிவாக்கம் செய்யும் பிரிவு அதிகாரிகள் தான் கவனிக்கின்றனர். அதுபற்றி எங்களுக்கு போதிய தகவல் இல்லை.
ஆனால், செவிலிமேடு புதிய உயர்மட்ட பாலம் கட்ட விரைவாக நிதி ஒதுக்கப்படும். இரு மாதங்களில் அரசாணை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.