/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., ஸ்ரீபெரும்புதூரில் அதிருப்தி
/
பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., ஸ்ரீபெரும்புதூரில் அதிருப்தி
பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., ஸ்ரீபெரும்புதூரில் அதிருப்தி
பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., ஸ்ரீபெரும்புதூரில் அதிருப்தி
ADDED : மார் 19, 2024 08:59 PM
அ.தி.மு.க.,வுடன் பேச்சு நடத்தி வந்த நிலையில் பா.ஜ., கூட்டணியில் திடீரென இணைந்துள்ளதால், ஸ்ரீபெரும்புதுார் பா.ம.க.,வினர் மத்தியில் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
பா.ஜ., கூட்டணியில், ஸ்ரீபெரும்புதுார் தொகுதி பா.ம.க.,வுக்கு ஒதுக்க வாய்ப்பு இருந்தாலும், பா.ம.க.,வினர் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக, அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, பா.ம.க.,வினர் கூறியதாவது:
ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில், 2009ல் அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., போட்டியிட்டு தோல்வியடைந்தது. 2019 தேர்தலிலும், அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,வே இரண்டாவது முறையாகவும் போட்டியிட்டது.
இம்முறை அ.தி.மு.க., கூட்டணியா, பா.ஜ., கூட்டணியா என வந்த போது, பெரும்பாலான நிர்வாகிகள், அ.தி.மு.க.,வுடன் சேர்வதற்கே ஆதரவு தெரிவித்தனர். ஆனால், திடீரென பா.ஜ.,வுடன் கூட்டணி முடிவு செய்யப்பட்டுவிட்டது.
பா.ம.க., தலைமையின் இந்த முடிவு, கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.
எம்.எல்.ஏ.,- எம்.பி., தேர்தல்களில் கூட்டணி வைக்கும் பா.ம.க., தலைமை, உள்ளாட்சி தேர்தலின் போது மட்டும் தனித்து போட்டியிடுவதாக அறிவிக்கிறது.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் கட்சியினர், கூட்டணி பலமின்றி பல லட்சம் செலவு செய்து தோல்வியடைய நேரிட்டது. இதனால், கூட்டணி பலத்தை கருதி, அ.தி.மு.க.,வுடன் நட்பு பாராட்டி வந்தனர்.
ஆனால், கூட்டணி தொடர்பாக நிர்வாகிகளின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்காமல், கட்சி மேலிடம் தன்னிச்சையாக முடிவெடுப்பது வழக்கத்தில் நீடிக்கிறது. இந்த நடவடிக்கைகளால், அக்கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.
ஸ்ரீ பெரும்புதுார் தொகுதியில் இம்முறை பா.ம.க., போட்டியிட்டால், தொண்டர்களின் அதிருப்திகளை சரிசெய்த பிறகே, களத்தில் இறங்க முடியும்.
தேர்தலுக்கு ஒரு மாதமே இருப்பதால், கட்சி நிர்வாகிகளை சமாதானப்படுத்துவதற்கு கூட அவகாசம் இல்லை.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

