/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிக்கு தி.மு.க., அளித்த வாக்குறுதிகள்...ஆறு!: முக்கிய திட்டங்கள் இடம் பெறாததால் ஏமாற்றம்
/
காஞ்சிக்கு தி.மு.க., அளித்த வாக்குறுதிகள்...ஆறு!: முக்கிய திட்டங்கள் இடம் பெறாததால் ஏமாற்றம்
காஞ்சிக்கு தி.மு.க., அளித்த வாக்குறுதிகள்...ஆறு!: முக்கிய திட்டங்கள் இடம் பெறாததால் ஏமாற்றம்
காஞ்சிக்கு தி.மு.க., அளித்த வாக்குறுதிகள்...ஆறு!: முக்கிய திட்டங்கள் இடம் பெறாததால் ஏமாற்றம்
ADDED : மார் 20, 2024 10:14 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில் உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், ஏராளமான பிரச்னைகள் உள்ள நிலையில், ரயில் சேவை, தேசிய நெடுஞ்சாலை என, வெறும் ஆறு வாக்குறுதிகளை தி.மு.க., அளித்திருப்பது, வாக்காளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
லோக்சபா தொகுதிக்கான தி.மு.க., தேர்தல் அறிக்கையை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டிருந்தார். இதில், தேசிய அளவில் மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகள் மற்றும் கொள்கை ரீதியில் எடுக்கவுள்ள பணிகள் மற்றும் வாக்குறுதிகளை தெரிவித்துள்ளனர்.
தேர்தல் அறிக்கையின் கடைசி பகுதியில், மாவட்ட அளவில் மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரச்னை
அவ்வாறு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐந்து வாக்குறுதிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றுவதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நிலவும் பிரச்னைகளில், வெறும் ஆறு வகையான பிரச்னைகளை மட்டுமே, தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருப்பதால், வாக்காளர்கள் மத்தியில் தேர்தல் அறிக்கை பற்றிய விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அரக்கோணத்திலிருந்து செங்கல்பட்டு இடையேயான ரயில் பாதையை, இரட்டை பாதையாக மாற்ற வேண்டும் என, பல ஆண்டுகளாக ரயில் பயணியர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இருப்பினும், இதுவரை நடைபெறாமல் உள்ளது. காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், ஐந்து ஆண்டுகள் பதவி வகித்தும் நிறைவேற்றாத இதே பிரச்னை, மீண்டும் வாக்குறுதியாக அளிக்கப்பட்டுள்ளது.
புதிய ரயில் நிலையத்தில் இயங்கும் முன்பதிவு மையம், அரை நாள் மட்டுமே இயங்கி வருகிறது.
முன்பதிவு மையம், நாள் முழுதும் இயங்க வேண்டும் என்ற அடிப்படை கோரிக்கை கூட இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என, ரயில் பயணியர் இன்று வரை குற்றஞ்சாட்டுகின்றனர்.
தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியில், பூந்தமல்லி- -- தாண்டவராயன் பிள்ளை சத்திரம் பகுதியில் நடை மேம்பாலம் அமைக்கப்படும் எனவும், ஸ்ரீபெரும்புதுார் - -காரைப்பேட்டை இடையேயான ஆறுவழிச் சாலை விரிவுபடுத்தப்படும் என்றும், காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம், மிகப்பெரிய ஆட்டோ மொபைல் சரக்கு முனையமாக செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டில் உள்ள நோய் தடுப்பு மருந்து உற்பத்தி வளாகத்தில் உற்பத்தியை துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில், இந்த வாக்குறுதிகள் மட்டுமே அளிக்கப்பட்டிருப்பதால், பிற முக்கிய வாக்குறுதிகள், அறிக்கையில் இடம் பெறவில்லை என, பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
நடவடிக்கை
குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு என, மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளி துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை அப்பள்ளி துவங்கவில்லை.
மத்திய அரசின் 'ஸ்மார்ட் சிட்டி', காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு கொண்டு வர வேண்டிய நடவடிக்கைகளும் கடந்தாண்டுகளில் எடுக்கப்படவில்லை.
ஸ்மார்ட் சிட்டி பணிக்கு காஞ்சிபுரம் தேர்வு செய்யப்பட்டால், மத்திய - மாநில அரசுகள் தலா 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யும். இந்த வாக்குறுதியும் அறிக்கையில் இடம் பெறாமல் போயுள்ளது.
கடந்த முறை போட்டியிடும்போது, கூடுதல் மின்சார ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, எம்.பி., செல்வம் தெரிவித்திருந்தார். ஆனால், அதுபோல், கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்படவில்லை.
ஏற்கனவே இயக்கப்பட்ட வட்ட வடிவ ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது. கூடுதல் மின்சார ரயில் சேவை துவங்கப்படும் என, இப்போதும் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மீனவர்களுக்கான அடிப்படை பிரச்னைகள் பல உள்ளன. அதேபோல, மாமல்லபுரம் வரையிலான ரயில் சேவை, இன்று வரை நிறைவேறாமல் உள்ளது.
இதுபோன்ற வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு என, இரு மாவட்டங்களுக்கும் சேர்த்து, ஆறு வாக்குறுதிகளே அளித்திருப்பது ஏமாற்றத்தை தருவதாக, வாக்காளர்கள் மத்தியில் விமர்சனம் எழுந்துள்ளது.

