/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின் நகர் பகுதி வக்பு வாரியத்திற்கு சொந்தம்?...திடீர் குழப்பம்! :நிலத்தை பத்திரப்பதிவு செய்ய முடியாமல் தவிப்பு
/
மின் நகர் பகுதி வக்பு வாரியத்திற்கு சொந்தம்?...திடீர் குழப்பம்! :நிலத்தை பத்திரப்பதிவு செய்ய முடியாமல் தவிப்பு
மின் நகர் பகுதி வக்பு வாரியத்திற்கு சொந்தம்?...திடீர் குழப்பம்! :நிலத்தை பத்திரப்பதிவு செய்ய முடியாமல் தவிப்பு
மின் நகர் பகுதி வக்பு வாரியத்திற்கு சொந்தம்?...திடீர் குழப்பம்! :நிலத்தை பத்திரப்பதிவு செய்ய முடியாமல் தவிப்பு
ADDED : ஜன 11, 2025 07:46 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மின் நகரில் ஹிந்துக்கள் வசிக்கும், 2.43 ஏக்கர் இடம், வக்பு வாரியத்திற்கு சொந்தம் என, காஞ்சிபுரம் சார் - பதிவாளர் அலுவலகம் தெரிவிப்பதால், அப்பகுதிவாசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் நிலையில், நிலத்தை பத்திரப்பதிவு செய்ய முடியாமல் சிரமப்படுவதாக, அவர்கள் புலம்புகின்றனர்.
காஞ்சிபுரம் மின் வாரிய அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்கள், காஞ்சிபுரம் மாநகராட்சி அருகே உள்ள கோனேரிக்குப்பத்தில் 1982ல் இடம் வாங்கினர். அந்த நிலத்தின் நான்கு சர்வே எண்களில் 6.13 ஏக்கர் இடத்தில் வீடு கட்டி குடியேறினர்.
இதில், 82, 83/2, 85, 89/2 ஆகிய நான்கு சர்வே எண்களில், 82 என்ற சர்வே எண்ணில் உள்ள 2.43 ஏக்கர் இடத்தை பத்திர பதிவு செய்வதில், தற்போது சிக்கல் எழுந்துள்ளதாக, மின் நகர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
இங்கு வசிக்கும் சாந்திபாய் என்பவர், தன் வீட்டை விற்பனை செய்ய, 2024 அக்டோபரில், காஞ்சிபுரம் சார் - பதிவாளர் அலுவலகத்தில் முயற்சித்துள்ளார்.
அப்போது, சர்வே எண்: 82ல் உள்ள 40க்கும் மேற்பட்ட குடியிருப்பு இடங்கள், வக்பு வாரியத்திற்கு சொந்தம் என, ஆட்சேபனை கடிதம் கொடுத்திருப்பதாக பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருந்து, சாந்திபாய்க்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது.
மேலும், வக்பு வாரியத்திடம் சென்று தடையில்லா சான்று வாங்கி வந்தால், கிரைய பத்திரம் பதிவு செய்வதாகவும் தெரிவித்துள்ளது.
அதேபோல், மின் நகரைச் சேர்ந்த டி.முன்சீப் என்பவர், தன்னுடைய சொத்துகளை, மகன், மகள் ஆகியோருக்கு பிரித்து எழுத முயற்சித்துள்ளார். ஆனால், வக்பு வாரிய இடம் என, பத்திரப்பதிவுத் துறை பதிவு செய்ய மறுத்துள்ளது.
இது குறித்து, மின் நகர் நலச்சங்கத்தின் செயலர் சீனிவாசன் கூறியதாவது:
மின் நகர் பகுதியில், சர்வே எண்: 82ல் உள்ள 2.43 ஏக்கர் இடம், 1944ல் கண்ணியப்பன் என்பரிடம் இருந்தது. அதை விட்டோபாஷா என்பவர், வருவாய் துறை வாயிலாக ஏலம் எடுத்தார்.
அவரிடம் இருந்து ஹிந்துக்களாகிய நாங்கள் 1982ல், வீட்டு மனைகளாக வாங்கினோம். எங்களுக்கு வருவாய் துறை பட்டா வழங்கியுள்ளது. உரிய முறையில் சொத்து வரி செலுத்துகிறோம்.
எந்தவித ஆவணங்களும் இன்றி, வக்பு வாரியம் தன் இடம் என ஆட்சேபனை தெரிவிப்பதால், பத்திரப்பதிவு துறை, எங்களது இடங்களை பதிவு செய்ய மறுக்கிறது.
இதனால் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. கடந்த 1967 - 74 மற்றும் 1974 - 81 ஆகிய ஆண்டுகளில், 'இந்த இடத்தில் எந்தவிதமான வில்லங்கமும் இல்லை' என, பத்திரப்பதிவு துறையே பதில் அளித்துள்ளது.
அவ்வாறு இருக்க, வக்பு வாரியம் இடம் எனக் கூறுவதற்கு உரிய ஆவணங்கள் உள்ளனவா என்பதை வெளியிட வேண்டும்.
இது சம்பந்தமாக, கலெக்டர், பத்திரப்பதிவுத்துறை மாவட்ட பதிவாளர், முதல்வர் தனிப்பிரிவு உள்ளிட்டோருக்கு புகார் அளித்துள்ளோம். அரசு தலையிட்டு, எங்கள் இடத்தை எங்களுக்கு உறுதி செய்து தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து தகவல் பெற, காஞ்சிபுரம் சார் - பதிவாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது, அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை.
கடந்தாண்டு எங்களுடைய வீட்டை விற்பனை செய்ய ஏற்பாடு செய்தோம். அப்போது, எங்கள் இடத்தை விற்பனை செய்ய முடியாது எனவும், வக்பு வாரியத்துக்கு சொந்தமான இடம் என, சார் - பதிவாளர் அலுவலகம் தெரிவித்தது அதிர்ச்சியாக இருந்தது. முழுதாக ஹிந்துகள் வசிக்கும் இடம், வக்பு வாரியத்திற்கு எப்படி சொந்தமாகும் என கேட்டால், சரியான பதில் இல்லை. சார் - பதிவாளர் அலுவலகம், எழுத்துப்பூர்வமாகவும் பதில் அளிக்க மறுக்கிறது. திருமண செலவுக்காக வீட்டை விற்க முயற்சித்தோம். ஆனால், வீட்டை விற்க முடியாதது மன உளைச்சலாக உள்ளது. அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஏ.டி.கந்தசாமி, மின் நகர்.

