/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சார் -- பதிவாளர் அலுவலகங்களில் இடைத்தரகர்களின் ஆதிக்கம்...அதிகரிப்பு!:'கட்டிங்' ஆவணங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக குற்றச்சாட்டு
/
சார் -- பதிவாளர் அலுவலகங்களில் இடைத்தரகர்களின் ஆதிக்கம்...அதிகரிப்பு!:'கட்டிங்' ஆவணங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக குற்றச்சாட்டு
சார் -- பதிவாளர் அலுவலகங்களில் இடைத்தரகர்களின் ஆதிக்கம்...அதிகரிப்பு!:'கட்டிங்' ஆவணங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக குற்றச்சாட்டு
சார் -- பதிவாளர் அலுவலகங்களில் இடைத்தரகர்களின் ஆதிக்கம்...அதிகரிப்பு!:'கட்டிங்' ஆவணங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக குற்றச்சாட்டு
ADDED : செப் 29, 2025 12:49 AM

காஞ்சிபுரம்:சார் - பதிவாளர் அலுவலகங்களில், இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. 'கட்டிங்' கொடுக்கும் ஆவணங்களுக்கு, முன்னுரிமை அளிப்பதாக, பதிவுதாரர்கள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காஞ்சிபுரம் பத்திரப்பதிவு மாவட்டத்தில், தாமல், வாலாஜாபாத், காஞ்சிபுரம் இணை எண் - 1; இணை எண் - 2; இணை எண் - 4 ஆகிய, ஐந்து பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன.
புலம்பல் அதேபோல, செங்கல்பட்டு பத்திரப்பதிவு மாவட்டத்தில், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், சாலவாக்கம், உத்திர மேரூர் ஆகிய நான்கு பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
மேற்கண்ட பத்திரப் பதிவு அலுவலகங்களில், பொதுமக்களின் ஆவணங்களை கிரைய பதிவு, பரிவர்த்தனை, சுத்த தானம், ஒத்தி, அடமானம், விடுதலை, தான செட்டில்மென்ட், பாகப்பிரிவு செட்டில்மென்ட், குடும்ப உறுப்பினர் அல்லாதவருக்கு தத்து ஆவணம், ரத்து ஆவணம், பிரதி, பொது அதிகார ஆவணம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.
மேலும், தனி அதிகார ஆவணம், உடன்படிக்கை, வில்லங்கம், பிறப்பு இறப்பு சான்று வழங்குதல், இந்து திருமண பதிவு செய்தல், தனி திருமணம் பதிவு செய்தல், கூட்டுறவு நிறுவனங்கள் பதிவு செய்தல் உள்ளிட்ட சேவைகளும் செயல்படுத்தி வருகின்றன.
காஞ்சிபுரம் பத்திரப்பதிவு மாவட்டத்திற்கு, 300 கோடி ரூபாய், செங்கல்பட்டு பத்திரப்பதிவு மாவட்டத்திற்கு, 500 கோடி என, வருவாய் இலக்கு நிர்ணயம் செய்து ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
ஒவ்வொரு, சார் - பதிவாளர் அலுவலகத்தில், ஆண்டுதோறும் தலா, 9,000 - 12,000 ஆவணங்கள் வரையில் பதிவு செய்யப்படுகின்றன.
பதிவுத்துறையில், அதிக வருவாய் தரும் 'அ' பிரிவு சார் - பதிவாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என, ஆவணங்கள் பதிவு செய்யும் பதிவுதாரர்கள் இடையே புலம்பலை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக, காஞ்சிபுரம் பத்திரப்பதிவு மாவட்டத்தில், வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரம் இணை எண் - 4ல் சார் - பதிவாளர்கள் இல்லை.
அதேபோல, செங்கல்பட்டு பத்திரப்பதிவு மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதுார், சாலவாக்கம் ஆகிய சார் - பதிவு அலுவலகங்களில், சார் - பதிவாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
கால தாமதம் ஒவ்வொரு சார் - பதிவாளர் அலுவலகங்களில், ஆவணங்கள் சரிபார்க்கும் அலுவலர்கள் மற்றும் கணினி பதிவேற்றம் செய்யும் நபர்களே கூடுதல் பதிவாளர்களாக பொறுப்பு வகித்து வருகின்றனர்.
இது போன்ற அலுவலர்கள், நேரடியாக லஞ்சம் வாங்கினால், சிக்கிக் கொள்ளாத அளவிற்கு செல்வாக்கு மற்றும் அதிகாரிகளின் செல்வாக்கு மிகுந்த நபர்களை இடைத்தரகர்களாக நியமிக்கின்றனர். அவர்களின் மூலமாக, 'கட்டிங்' பேரம் பேசி ஆவணங்களை பதிவு செய்கின்றனர்.
நேரடியாக பத்திரப் பதிவு செய்ய போகும் பதிவுதாரர்களுக்கு, ஆவணங்கள் பதிவு செய்வதற்கு கால தாமதம் ஏற்படுகிறது.
உதாரணமாக, 1,200 சதுர அடி வீட்டு மனை பத்திரப்பதிவு செய்வதற்கு, 2,000 -- 5,000 ரூபாய் வரையில் கட்டிங் வசூலிக்கின்றனர். இது, ஒவ்வொரு நிலை அதிகாரிகளுக்கும் சரியான முறையில் பிரித்தளிக்கப்படுவதாக ஆவணம் பதிவு செய்யும் பதிவுதாரர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதுதவிர, குறைந்தவழி காட்டி மதிப்புகளை அதிகமாக கூட்டி போடுவது; ஆவண பதிவுதாரர்களுக்கு சில ஆதாயங்களை தேடி தருவது உள்ளிட்ட பல்வேறு விதமான ஆவணங்களுக்கு லட்சக்கணக்கில் பேரம் பேசப்படுகிறது.
மேலும், கோடி கணக்காண ரூபாய்க்கு நிலம் வாங்கினால் பத்து சதவீத பணத்தை கட்டிங்காக வசூலிக்கும் சூழல் உருவாகி உள்ளது.
இதை கண்காணிக்க வேண்டிய லஞ்ச ஒழிப்பு துறையினர் கைக்கட்டி வேடிக்கை பார்ப்பதாக பதிவுதாரர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் நகரத்தைச் சேர்ந்த பதிவுதாரர் ஒருவர் கூறியதாவது:
கலப்பு திருமணத்திற்கு பதிவு செய்ய சென்றால், பதிவு துறை விதிகளை கடை பிடிக்க அறிவுரை கூறுகின்றனர். அதே பதிவுக்கு, ஒரு இடைத்தரகர் மூலமாக சென்றால், ஆவணம் வீட்டிற்கு வந்துவிடுகிறது.
இதற்கு, பதிவு கட்டணம் இல்லாமல், 25 ஆயிரம் ரூபாய் வரை கூடுதலாக கொடுக்க வேண்டி உள்ளது. இந்த சான்று வைத்து பல ஆதாயங்களை அடையப் போகிறீர்கள். கொடுத்தால் என்ன என, கேட்டு வாங்குகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
டோக்கன் இதுகுறித்து, பத்திரப் பதிவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
டோக்கன் வரிசை படி ஆவணங்களை பதிவு செய்து வருகிறோம். லஞ்சம் கொடுக்கும் ஆவணங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறோம் என, கூறுவது தவறானது.
ஒரு சில ஆவணங்களில் குறைபாடு இருக்கும் போது, அதை சரி செய்து ஆவணமாக பதிவு செய்து கொடுக்கிறோம். வேறு ஒன்றுமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.