/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புற்றுநோய் மையத்தில் குப்பை எரிப்பு வாகன ஓட்டிகள், நோயாளிகள் அவதி
/
புற்றுநோய் மையத்தில் குப்பை எரிப்பு வாகன ஓட்டிகள், நோயாளிகள் அவதி
புற்றுநோய் மையத்தில் குப்பை எரிப்பு வாகன ஓட்டிகள், நோயாளிகள் அவதி
புற்றுநோய் மையத்தில் குப்பை எரிப்பு வாகன ஓட்டிகள், நோயாளிகள் அவதி
ADDED : பிப் 12, 2025 12:32 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு பொது, மகப்பேறு, குழந்தை, கண், பல், தோல், டயாலிசிஸ் என, பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தினமும் ஆயிரக்கணக்கானோர் புறநோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் தங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையை ஒட்டி, அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி நிலையம், மண்டல புற்றுநோய் மையம் இயங்கி வருகிறது.
இம்மருத்துவமனையில் சேகரமாகும் குப்பையை முறையாக வெளியேற்றப்படுவதில்லை. அவ்வாறு தேங்கும் குப்பையை, நேற்று மதியம் 12:45 மணிக்கு மைய ஊழியர்கள் தீ வைத்தனர். தீயிலிருந்து வெளியேறிய புகை, வாகன போக்குவரத்து நிறைந்த ரயில்வே சாலை மற்றும் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரவியதால், அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது.
சாலையில் சென்ற பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தவர்களும் புகையால் கடும் அவதிப்பட்டனர். நோய் குணமாக சிகிச்சைக்காக வந்தவர்களுக்கு, புகையால் சுவாச கோளாறு, மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் உள்ளது என, நோயாளிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எனவே, மண்டல புற்றுநோய் மைய ஆராய்ச்சி நிலைய வளாகத்துக்குள் குப்பையை எரிப்பதை தடுத்து, குப்பையை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும், விதிமீறி குப்பையை மருத்துவமனை வளாகத்துக்குள் எரித்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.