/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் நகரில் 3 கி.மீ., புறவழிச்சாலை அமையாததால்... வாகன நெரிசல்:போக்குவரத்தில் பலமுறை மாற்றம் செய்தும் பலனில்லை
/
காஞ்சிபுரம் நகரில் 3 கி.மீ., புறவழிச்சாலை அமையாததால்... வாகன நெரிசல்:போக்குவரத்தில் பலமுறை மாற்றம் செய்தும் பலனில்லை
காஞ்சிபுரம் நகரில் 3 கி.மீ., புறவழிச்சாலை அமையாததால்... வாகன நெரிசல்:போக்குவரத்தில் பலமுறை மாற்றம் செய்தும் பலனில்லை
காஞ்சிபுரம் நகரில் 3 கி.மீ., புறவழிச்சாலை அமையாததால்... வாகன நெரிசல்:போக்குவரத்தில் பலமுறை மாற்றம் செய்தும் பலனில்லை
ADDED : செப் 14, 2025 02:05 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரில் 3 கி.மீ., புறவழிச்சாலை பணிகள் கிடப்பில் இருப்பதால், நகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் குறையாமல் கடுமையாக உள்ளது. போலீசார் முயற்சி பலன் அளிக்காததால், வாகன ஓட்டிகள் நெரிசல் சிக்கி தினமும் விழிபிதுங்கி வருகின்றனர்.
ஆன்மிக தலமாகவும், பட்டு சேலை உற்பத்திக்கு புகழ் பெற்ற ஊராகவும் காஞ்சிபுரம் இருப்பதால், அன்றாடம் ஆயிரக்கணக்கான வெளியூர்வாசிகள் காஞ்சிபுரம் வந்து செல்கின்றனர். இதனால், நகரின் போக்குவரத்து நெரிசல் கடுமையாக மாறிவிட்டது.
நெரிசலை குறைக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதும் அவை கைகொடுக்காததால், முகூர்த்த நாட்கள், பண்டிகை நாட்களில் நகர முடியாத அளவுக்கு வாகன நெரிசல் ஏற்படுகிறது.
நெரிசலை குறைக்க, 2016ல், காஞ்சிபுரம் ஏ.எஸ்.பி.,ஸ்ரீநாத், ஷேர் ஆட்டோக்கள் நின்று செல்ல தனி நிறுத்துமிடத்தை ஏற்படுத்தினார். இதை எந்த ஆட்டோ ஓட்டுனர்களும் மதிக்கவில்லை.
அதேபோல், 2021 அக்டோபர் மாதம், காஞ்சிபுரம் காந்தி சாலையின் ஒரு பகுதி முழுதும் பார்க்கிங் ஆக மாற்றி, அப்போதைய கலெக்டர் ஆர்த்தி, மாவட்ட எஸ்.பி., சுதாகர் ஆகியோர் நடவடிக்கை எடுத்தனர். பல வாகனங்கள் நாள் முழுதும் ஒரே இடத்தில் நின்றதால், வேறு வழியில்லாமல் சில நாட்களிலேயே அந்த திட்டம் கைவிடப்பட்டது.
கடந்த 2023 ஆகஸ்ட் மாதம், மேட்டுத்தெரு அருகில் உள்ள ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், பார்க்கிங் இடமாக மாற்றி, அவற்றை கலெக்டர் கலைச்செல்வி திறந்து வைத்தார். ஆனால், அந்த இடத்தில் வாகனமும் நிறுத்தாததால் அந்த திட்டமும் கைவிடப்பட்டது.
ஆறு மாதங்கள் முன்பாக, காந்தி சாலை, பூக்கடை சத்திரம் ஆகிய சாலைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டன. இந்த செயல்திட்டம் ஓரளவு கைகொடுத்த நிலையில், மேட்டுத்தெரு, காமராஜர் சாலை, மேற்கு ராஜவீதி, ஓரிக்கை, செவிலிமேடு போன்ற பகுதிகளில் நெரிசல் குறையாமல் உள்ளது. முகூர்த்த நாட்களில் போலீசாரால் சமாளிக்க முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்படுகிறது.
இந்த நெரிசலை குறைக்க, காஞ்சிபுரம் நகரில் புறவழிச்சாலை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. செவிலிமேட்டில் துவங்கும் புறவழிச்சாலை, ஜெம் நகர், திருப்பருத்திக்குன்றம் வழியாக பிள்ளையார்பாளையம் கடந்து குஜராத்தி சத்திரம் அருகே இணையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த புறவழிச்சாலையின் ஒரு பகுதியில் வேகவதி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் 5 கோடி ரூபாயில் கட்டும் பணி இரு ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது. ஆனால், மேலும் 6 கோடி ரூபாய் தேவை என மாநகராட்சி நிர்வாகம் தெரிவிக்கிறது. கூடுதல் நிதி கிடைக்காததால், பால பணி இதுவரை முடியாமல் உள்ளது.
புறவழிச்சாலையின் முக்கிய பகுதியாக உள்ள இந்த பாலம் கட்டும் பணி நிறைவடையாததால், நகரில் நெருக்கடி குறையமலேயே உள்ளது.
திண்டிவனம், செய்யாறு, உத்திரமேரூர், திருவண்ணாமலை போன்ற ஊர்களில் இருந்து வரும் வாகனங்கள், திருப்பதி, திருத்தணி நோக்கி செல்ல, இந்த புறவழிச்சாலை பயன்படும். ஆனால், புறவழிச்சாலை பணிகள் கிடப்பில் இருப்பதால், திருப்பதி, திருத்தணி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் நகருக்குள் 3 கி.மீ.,துாரம் செல்ல வேண்டியுள்ளது.
மாநகராட்சி ஒத்துழைப்பில்லை புறவழிச்சாலைக்கான பணிகள் பற்றி, சாலை பாதுகாப்பு மீட்டிங்கிலும் பேசியுள்ளோம். பால பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என, மாநகராட்சியிடம் கேட்டுள்ளோம். மேலும், நகரின் முக்கிய சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும். ஆனால், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மாநகராட்சியின் ஒத்துழைப்பு போதுமான அளவு இல்லாததால், வாகன நெருக்கடி ஏற்படுகிறது. போலீசாரும் பாதுகாப்பு பணிக்கு சென்று விட்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடுகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கிறோம். - சண்முகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காஞ்சிபுரம்.