/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரூ.132 கோடியில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை 8 லட்சம் தொழிலாளர்கள் பயன் பெறுவர்
/
ரூ.132 கோடியில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை 8 லட்சம் தொழிலாளர்கள் பயன் பெறுவர்
ரூ.132 கோடியில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை 8 லட்சம் தொழிலாளர்கள் பயன் பெறுவர்
ரூ.132 கோடியில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை 8 லட்சம் தொழிலாளர்கள் பயன் பெறுவர்
ADDED : செப் 28, 2025 12:33 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஆண்டுக்கு 8 லட்சம் தொழிலாளர்கள் சிகிச்சை பெறும் வகையில், 132 கோடி ரூபாயில், இ.எஸ்.ஐ., மருத்துவமனையை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் கட்டி வருகிறது. நவம்பர் மாதம் பணிகள் முடியும் நிலையில், சில மாதங்களில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
தமிழகத்தில் அதிக தொழிற்சாலைகள் உடைய மாவட்டமாக காஞ்சிபுரம் உள்ளது. இங்கு, பிள்ளைப்பாக்கம், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம், வல்லம், ஸ்ரீபெரும்புதுதுார் உள்ளிட்ட ஏழு சிப்காட் தொழிற் பூங்காக்களும், திருமுடிவாக்கம், ஓரிக்கை, வையாவூர் ஆகிய சிட்கோ தொழிற்பேட்டைகளும் உள்ளன.
இவற்றில் செயல்படும், 1,500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.
இவர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புகள், ஓய்வறைகள் உள்ளிட்ட வசதிகளை, தமிழக தொழிலாளர் நலத்துறை மேற்கொண்டு வரும் நிலையில், தொழிலாளர்களுக்காக பெரிய அளவிலான மருத்துவமனை இல்லை.
அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதுார் தாலுகா அரசு மருத்துவமனையில் வசதிகள் குறைவு என்பதால், அனைத்து வசதிகளுடன்கூடிய இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்ட வேண்டிய தேவை இருந்தது.
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், இதற்கான நடவடிக்கையை, 2020ல் மேற்கொண்டது.
அதையடுத்து, வல்லம் பகுதியில், 5 ஏக்கர் பரப்பளவில், இ.எஸ்.ஐ., மருத்துவமனையை கட்ட, 2022ல், மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு, வனத்துறை அமைச்சர் பூபேந்த் யாதவ் மற்றும் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை இணைய அமைச்சர் ராமேஸ்வர் தெலி ஆகியோர், அடிக்கல் நாட்டினர்.
இங்கு விபத்து பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, இரண்டு அறுவை சிகிச்சை அரங்கு, மக்கள் மருந்தகம், கதிரியக்கவியல் எலும்பு சிகிச்சை, பல் மருத்துவம், உள் நோயாளிகள், புற நோயாளிகள் பிரிவு, காது, மூக்கு, தொண்டை என அனைத்து வசதிகள் உடைய மருத்துவமனையாக அமைகிறது.
ஆண்டுக்கு 8 லட்சம் பேர், உள் மற்றும் புற நோயாளிகளாக சிகிச்சை பெறும் வகையில், இந்த மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.
மொத்தம் 132 கோடி ரூபாய் மதிப்பில், மூன்று ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த இந்த இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டுமான பணிகள், 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. விரைவில் திறக்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த இ.எஸ்.ஐ., மருத்துவமனை, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஒரு வரப்பிரசாதம் என, தொழிலாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
மத்திய அரசின் பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்த மருத்துவமனையின் கட்டுமான பணிகள் நவம்பர் அல்லது டிசம்பரில் முடிவடையும்.
ஒரகடம் - ஸ்ரீபெரும்புதுார் இடையே இந்த இ.எஸ்.ஐ., மருத்துவமனை அமைந்துள்ளதால், அனைத்து சிப்காட் பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்கள், மருத்துவமனையை எளிதாகவும், விரைவாகவும் அடையலாம். தொழிலாளர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்பதால், 2 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவர்.
இவ்வாறு கூறினர்.