/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தாம்பரம், காஞ்சிபுரம் மாநகராட்சிகள் 2026ல் விரிவாக்கம்!: உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி காலத்தல் நிறுத்திவைப்பு
/
தாம்பரம், காஞ்சிபுரம் மாநகராட்சிகள் 2026ல் விரிவாக்கம்!: உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி காலத்தல் நிறுத்திவைப்பு
தாம்பரம், காஞ்சிபுரம் மாநகராட்சிகள் 2026ல் விரிவாக்கம்!: உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி காலத்தல் நிறுத்திவைப்பு
தாம்பரம், காஞ்சிபுரம் மாநகராட்சிகள் 2026ல் விரிவாக்கம்!: உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி காலத்தல் நிறுத்திவைப்பு
UPDATED : ஜன 08, 2025 12:52 AM
ADDED : ஜன 07, 2025 09:24 PM

புதிதாக உருவான செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில், உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடையாததால், தாம்பரம், காஞ்சிபுரம் மாநகராட்சிகள் விரிவாக்கம் செய்யும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வரும், 2026ல் விரிவாக்க பணிகளுடன், புதிய நகராட்சிகள், பேரூராட்சிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உருவாகும் என, நகராட்சி நிர்வாகத் துறை தெரிவித்துள்ளது.
தாம்பரம் மாநகராட்சியுடன் ஊரப்பாக்கம், வண்டலுார், திருவிஞ்சேரி, அகரம்தென், சித்தலபாக்கம் உட்பட, 18 கிராம ஊராட்சிகள் இணைக்கப்படும் என, கடந்தாண்டு வெளியிட்ட அறிவிப்பில், தமிழக அரசு தெரிவித்தது.
அதேபோல், காஞ்சிபுரம் மாநகராட்சியில், கோனேரிகுப்பம், திருப்பருத்திக்குன்றம், கருப்படைத்தட்டை, ஏனாத்துார் உள்ளிட்ட 11 கிராம ஊராட்சிகள் இணைக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது.
ஆனால், உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு தொடர்பாக, டிச., 31ல் வெளியான அறிவிப்பில், சென்னை, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட 16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகள், 25 பேரூராட்சிகளின் எல்லைகளின் விரிவாக்கத்தை, தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டது.
அதேபோல், புதிதாக 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் இடம் பெறவில்லை. இதனால், தாம்பரம், காஞ்சிபுரம் மாநகராட்சிகள் விரிவாக்கம் கைவிடப்படுகிறதா என்ற கேள்வி எழுந்தது.
இது குறித்து, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் தவிர்த்து, மற்ற மாவட்டங்களுக்கு 2019ல் உள்ளாட்சி தேர்தல் நடந்தது.
ஆனால், காஞ்சிபுரத்தில் இருந்து பிரித்து செங்கல்பட்டு உருவாக்கப்பட்ட பின், இந்த இரு மாவட்டங்களுக்கும், ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2021ல் நடந்தது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம், 2026ல் முடிவடைகிறது.
அதனால், உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்தப்பின், இம்மாவட்டங்களில் உள்ள தாம்பரம், காஞ்சிபுரம் மாநகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்படும்.
மேலும், செங்கல்பட்டு நகராட்சியில் 15 கிராம ஊராட்சிகள், நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில் மூன்று ஊராட்சிகள் இணைக்கப்பட்டு, விரிவாக்கம் செய்யப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதுார், செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் ஆகியவை புதிய நகராட்சியாக உருவாக்கப்படும்.
இதை தவிர, பெரிய ஒன்றியங்கள், பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் மூன்று பேரூராட்சிகள் தரம் உயர்த்தப்படும். இந்தாண்டு இறுதி அல்லது 2026ல் இதற்கான பணிகள் துவங்கப்பட்டு, செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

