/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாதில் வரைமுறையின்றி நிறுத்தும் தொழிற்சாலை பஸ்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதி

ADDED : மே 30, 2025 01:11 AM

வாலாஜாபாத்:காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில், வாலாஜாபாத் நகர் பகுதி உள்ளது. வாலாஜாபாத் அருகாமையில் ஒரகடம் சிப்காட் உருவானதற்கு பின், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண் தொழிலாளர்கள், வாலாஜாபாதில் தங்கி தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றனர்.
மேலும், வாலாஜாபாத் சுற்றி உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களும், ஒரகடம் சிப்காட் மற்றும் கட்டவாக்கம், தேவரியம்பாக்கம், சிங்காடிவாக்கம், வாரணவாசி, படப்பை, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றனர்.
இத்தொழிலாளர்களை அவர்கள் பணியாற்றக்கூடிய தொழிற்சாலைகளுக்கு அழைத்து செல்ல தொழிற்சாலைகள் வாயிலாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தொழிற்சாலைகள் அதிகரிப்புக்கு ஏற்ப பேருந்துகளும் அதிகரித்து, வாலாஜாபாத் சாலை வழியாக தொடர்ந்து இயக்கப்படுகின்றன.
இவ்வாறான பேருந்துகள், வாலாஜாபாத் ரயில்வே பாலம் சாலை, பேருந்து நிலைய சாலை, ரவுண்டனா சாலை மற்றும் ராஜ வீதி என, குறிப்பிட்ட இடங்களில் மட்டும் கடந்த நாட்களில் நிறுத்தம் செய்து இயங்கி வந்தன.
ஆனால், சமீப காலமாக வாலாஜாபாத் சாலையில் தொழிலாளர்கள் நிற்கக்கூடிய எந்த பகுதியிலும், தொழிற்சாலை பேருந்துகள் தங்கள் இஷ்டத்திற்கு நிறுத்தம் செய்து தொழிலாளர்களை ஏற்றி, இறக்கி செல்கின்றனர்.
இதனால், அப்பேருந்துகளின் பின்னால் வரும் கனரக வாகனங்கள், அரசு பேருந்து, வேன், கார் உள்ளிட்ட வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பல தரப்பினரும் அவதிபடுகின்றனர்.
குறிப்பாக காலை மற்றும் மாலை நேரத்தில் இத்தகைய பிரச்னை பெரிய அளவில் உள்ளது.
எனவே, தொழிற்சாலை பேருந்துகள் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வாலாஜாபாத் சாலையில் நிறுத்தம் செய்து இயக்கும் வகையிலான நடவடிக்கை தேவை என, பல தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.