/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாலாற்றில் இருந்து 2 டி.எம்.சி., தண்ணீர் கடலில் கலந்து வீண்; தடுப்பணைகள் இல்லை என விவசாயிகள் வேதனை
/
பாலாற்றில் இருந்து 2 டி.எம்.சி., தண்ணீர் கடலில் கலந்து வீண்; தடுப்பணைகள் இல்லை என விவசாயிகள் வேதனை
பாலாற்றில் இருந்து 2 டி.எம்.சி., தண்ணீர் கடலில் கலந்து வீண்; தடுப்பணைகள் இல்லை என விவசாயிகள் வேதனை
பாலாற்றில் இருந்து 2 டி.எம்.சி., தண்ணீர் கடலில் கலந்து வீண்; தடுப்பணைகள் இல்லை என விவசாயிகள் வேதனை
ADDED : டிச 03, 2024 04:46 AM

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாவட்டத்தில், மூன்று நாட்களாக பெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால், நீர்நிலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் மட்டுமல்லாமல், திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற மாவட்டங்களிலும் உள்ள நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
எச்சரிக்கை
குறிப்பாக, செய்யாறு ஆற்றில் இரு கரை தொட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், இரு கரையோரத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்யாறு ஆறு, திருமுக்கூடல் பகுதியில் பாலாற்றுடன் கலக்கிறது. இதனால், பாலாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து வரும் செய்யாறு ஆறு, பெருநகர் பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட எல்லைக்குள் நுழைகிறது.
பெருநகர் பகுதியில், வினாடிக்கு 22,982 கன அடிநீர் செல்வதாக நீர்வள ஆதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அதேபோல், வெங்கச்சேரி அணைக்கட்டு அமைந்துள்ள இடத்தில், 20,427 கன அடியும், திருமுக்கூடல் பாலாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில், 17,400 கன அடிநீரும் செல்வதாக நீர்வள ஆதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
காஞ்சிபுரம், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளில் பாயும் பாலாற்றில் நீர்வரத்து குறைவாக இருப்பதாகவும், ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அணைக்கட்டு அமைந்துள்ள பகுதியில், வினாடிக்கு 1,000 கனஅடி நீர் வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், திருமுக்கூடல் பாலாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வேலுார், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் பாலாற்றில், ஆண்டுதோறும் வெள்ளப்பெருக்கு ஏற்படவில்லை என்றாலும், செய்யாறு வழியாக திருமுக்கூடலில் ஆண்டு தோறும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.
இதன் காரணமாகவே, பாலாற்றில் கட்டப்பட வேண்டிய தடுப்பணைகளை விரைந்து கட்ட வேண்டும் என, விவசாயிகள் மற்றும் கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெங்குடி, வெங்கடாவரம் ஆகிய இடங்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உதயம்பாக்கம், பாலுார் ஆகிய இரு இடங்கள் என, மொத்தம் நான்கு இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டியுள்ளது.
இதற்கான அறிவிப்புகள், முன்னாள் முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார். ஏற்கனவே வள்ளிபுரம், வாயலுார், பழையசீவரம் ஆகிய, மூன்று இடங்களில் தடுப்பணை கட்டப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள நான்கு இடங்களிலும் தடுப்பணை கட்டப்படாமல் இழுத்தடிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் வழியாக, வாயலுார் எனும் இடத்தில், பாலாறு கடலில் கலக்கிறது.
நேற்றைய கணக்கெடுப்பில், வாயலுார் தடுப்பணையில், வினாடிக்கு 24,268 கனஅடி நீர், அதாவது ஒரு நாளைக்கு, 2.09 டி.எம்.சி., தண்ணீர் கடலில் வீணாக கலக்கிறது.
கடந்த காலங்களில், பல நுாறு டி.எம்.சி.,தண்ணீர் வீணாக கடலில் கலந்தது. பாலாற்றில் நான்கு தடுப்பணைகள் கட்டப்பட்டிருந்தால், சுற்றியுள்ள கிராமங்களுக்கு தேவையான குடிநீர் ஆதாரத்தை பெருக்கியிருக்க முடியும் என, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
29 ஏரிகள் நிரம்பின
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
நவம்பர் மாதம் இறுதி வரை, நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில், வெறும் 7 ஏரிகள் மட்டுமே நிரம்பியிருந்தன.
இரு நாட்களாக பெய்த கனமழை காரணமாக, ஒரே நாளில், 29 ஏரிகள் நிரம்பியதால், மாவட்டம் முழுதும் 36 ஏரிகள், 100 சதவீதம் நிரம்பியுள்ளன. மீதமுள்ள 77 ஏரிகள் 75 சதவீதமும், 142 ஏரிகள் 50 சதவீதமும், 125 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பியுள்ளன.
படப்பை அருகேயுள்ள வரதராஜபுரம் பகுதியில் உள்ள அணைக்கட்டு தாங்கல் ஏரி மட்டும், நீர் நிரம்பாமல் உள்ளது.
ஏரி முழுதும் வீடுகள் கட்டி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், இந்த ஏரி நிரம்ப முடியாத நிலை நீடிக்கிறது.
மாவட்டத்தில், பெரிய ஏரிகள் என, ஆறு ஏரிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. தாமல், ஸ்ரீபெரும்புதுார், பிள்ளைப்பாக்கம், தென்னேரி, மணிமங்கலம், உத்திரமேரூர் ஆகிய, ஆறு பெரிய ஏரிகளும் பெருமளவில் நிரம்பியிருப்பதாக, நீர்வள ஆதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.