/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வெங்கச்சேரி அணைக்கட்டுக்கு ரூ.18 கோடி அரசாணை வெளியிட விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
வெங்கச்சேரி அணைக்கட்டுக்கு ரூ.18 கோடி அரசாணை வெளியிட விவசாயிகள் எதிர்பார்ப்பு
வெங்கச்சேரி அணைக்கட்டுக்கு ரூ.18 கோடி அரசாணை வெளியிட விவசாயிகள் எதிர்பார்ப்பு
வெங்கச்சேரி அணைக்கட்டுக்கு ரூ.18 கோடி அரசாணை வெளியிட விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : மே 23, 2025 08:00 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், வெங்கச்சேரி அணைக்கட்டை சீரமைக்கவும், கால்வாய் கட்டவும் 18 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என, சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் நீர்வளத் துறை அமைச்சராக இருந்து துரைமுருகன், அறிவித்த அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 8 கோடி ரூபாய் மதிப்பில், வெங்கச்சேரி கிராமத்தில் செய்யாற்றின் குறுக்கே, 2017ல், புதிதாக அணைக்கட்டு கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டின் ஷட்டரில் இருந்து வெளியேறும் தண்ணீர், நீர் வரத்து கால்வாய் வாயிலாக, காவாந்தண்டலம் ஏரிக்கு சீராக செல்லும் வகையில் கட்டப்பட்டது.
இந்த அணைக்கட்டு வாயிலாக, காவாண்தண்டலம் ஏரிக்கு, செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போதெல்லாம், பக்கவாட்டு கால்வாய் வாயிலாக தண்ணீர் கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
மாகரல் கிராமம் அருகே, 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கும், நிலத்தடி நீரை உயர்த்தவும் இந்த அணைக்கட்டு வாயிலாக பயன்பெற முடிந்தது.
இந்நிலையில், 2021ல் பெய்த கனமழை காரணமாக, செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, அணைக்கட்டின் அடிப்பகுதி சேதமானது. கட்டி முடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகளிலேயே அணைக்கட்டின் அடிப்பகுதி சேதம் ஆனது.
இதனால், காவாந்தண்டலம் ஏரிக்கு நீர் கொண்டு செல்ல முடியாமல், நான்கு ஆண்டுகளாக விவசாயிகள் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், கடந்த மார்ச் மாதம், வெங்கச்சேரி அணைக்கட்டு சீரமைக்கவும், கால்வாய் கட்டவும் 18 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார்.
அதுமட்டுமல்லாமல், தாமல் ஏரியின் மதகு 6ல், ஏரிக்கரையின் பின்பகுதியில், பாதுகாப்பு சுவர் அமைக்கும் பணியை, 6 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளவும், கோவிந்தவாடி கிராமத்தில், பெரிய ஏரி மற்றும் சிற்றேரியை 1 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்படும் என, அறிவிப்பு வெளியிட்டார்.
இந்த முக்கிய அறிவிப்புகள் விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றன. இருப்பினும், அறிவிப்பு வெளியாகி மூன்று மாதங்கள் ஆகின்றன. இத்திட்டங்களுக்கான அரசாணை வெளியிடப்படவில்லை என, விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
அரசாணை வெளியிட்ட பின், நிதி ஒதுக்கப்படும். அதன்பின், டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கும். இதனால், எப்போது பணிகள் துவங்கி விவசாய பணிகளை மேற்கொள்ள முடியும் என, விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து, நீர்வளத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'நிதித் துறையில் இத்திட்ட கோப்புகள் உள்ளன. அங்கு துறை உயரதிகாரிகள் பேசி வருகின்றனர். விரைவாக நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்வார்கள்' என்றார்.