/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பழையசீவரம் பாலாற்று தடுப்பணையில் 5,900 கன அடி தண்ணீர் வெளியேற்றம் சுற்றுவட்டார கிராம விவசாயிகள் மகிழ்ச்சி
/
பழையசீவரம் பாலாற்று தடுப்பணையில் 5,900 கன அடி தண்ணீர் வெளியேற்றம் சுற்றுவட்டார கிராம விவசாயிகள் மகிழ்ச்சி
பழையசீவரம் பாலாற்று தடுப்பணையில் 5,900 கன அடி தண்ணீர் வெளியேற்றம் சுற்றுவட்டார கிராம விவசாயிகள் மகிழ்ச்சி
பழையசீவரம் பாலாற்று தடுப்பணையில் 5,900 கன அடி தண்ணீர் வெளியேற்றம் சுற்றுவட்டார கிராம விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : டிச 10, 2024 07:01 AM

வாலாஜாபாத் : காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த திருமுக்கூடல் அருகே பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கின்றன.
பாலாற்றின் மூலம் திருமுக்கூடல், மதூர், பட்டா, சிறுதாமூர், பினாயூர், பழையசீவரம், உள்ளாவூர், பாலுார் போன்ற சுற்றுவட்டார கிராமங்களின் குடிநீர் தேவை பூர்த்தியாவதோடு, விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.
இப்பகுதி பாலாற்று படுகையை மையமாக கொண்டு தடுப்பணை கட்டி, பாலாற்றின் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க செய்ய சுற்றுவட்டார கிராம விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று, 2020ம் ஆண்டு பழையசீவரம்- - பழவேரி பாலாற்றின் குறுக்கே, நபார்டு திட்டத்தின் கீழ், 42 கோடி ரூபாய் செலவில் நீர்வளத் துறை சார்பில் புதிய தடுப்பணை கட்டப்பட்டது.
இந்த தடுப்பணையின் வலது மற்றும் இடது புறங்களில் மதகுடன் கூடிய ஷட்டர் மற்றும் துணை பாசனக் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தடுப்பணை நிரம்பினால், அரும்புலியூர், உள்ளாவூர், பாலுார் உள்ளிட்ட ஏரிகளுக்கு பாசன கால்வாய் வழியாக தண்ணீர் செல்ல வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அப்பகுதி ஏரிகளுக்கு தடுப்பணை வாயிலாக தற்போது நீர்வரத்து சென்றபடி உள்ளது.
கடந்த மாதம் 30ம் தேதி, பெஞ்சல் புயல் கராணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக செய்யாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
அதன் வாயிலாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனுமந்தண்டலம் செய்யாற்று அணைக்கட்டு, வெங்கச்சேரி செய்யாற்று தடுப்பணை மற்றும் பழையசீவரம் பாலாற்று தடுப்பணைகள் நிரம்பி, கடந்த 10 நாட்களாக தொடர்ந்து தண்ணீர் வழிந்தோடுகிறது.
பழையசீவரம் பாலாற்று தடுப்பணையில் நேற்றைய கணக்கீட்டின் படி, வினாடிக்கு 5,900 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேறுவதாக நீர்வளத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன் வாயிலாக பினாயூர், சீட்டணஞ்சேரி, சாத்தணஞ்சேரி, காவூர், ஒரக்காட்டுப்பேட்டை, பழையசீவரம், பாலுார், வில்லியம்பாக்கம், ஆத்துார், திம்மாவரம் உள்ளிட்ட பாலாற்று படுகைகளில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து உள்ளது.
இதனால், அப்பகுதியில் வரும் கோடைக்காலத்திற்கு குடிநீர் தேவை பூர்த்தியாவதோடு, பாலாற்று பாசன விவசாய நிலங்களில் தொடர்ந்து சாகுபடி செய்ய ஏதுவான நிலை உள்ளதாக, அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.