/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூரில் காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம் கட்டுப்படுத்த வழி தெரியாமல் விவசாயிகள் தவிப்பு
/
உத்திரமேரூரில் காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம் கட்டுப்படுத்த வழி தெரியாமல் விவசாயிகள் தவிப்பு
உத்திரமேரூரில் காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம் கட்டுப்படுத்த வழி தெரியாமல் விவசாயிகள் தவிப்பு
உத்திரமேரூரில் காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம் கட்டுப்படுத்த வழி தெரியாமல் விவசாயிகள் தவிப்பு
ADDED : ஆக 06, 2025 02:13 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளில், பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவதால், அவற்றின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வழி தெரியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
உத்திரமேரூர் ஒன்றியத்தில் 73 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் விவசாய தொழிலை பிரதானமாக செய்து வருகின்றனர். இங்கு, நெல், கரும்பு, வேர்க்கடலை, உளுந்து உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
தற்போது, உத்திரமேரூர் ஒன்றியத்தில் சொர்ணவாரி பருவத்திற்கு 12,200 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, உளுந்து 122 ஏக்கரும், கேழ்வரகு 425 ஏக்கரும், கரும்பு 800 ஏக்கரும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த பகுதிகளில் உள்ள வனம் மற்றும் ஏரிப்பகுதிகளில் சுற்றித்திரியும் காட்டுப்பன்றிகள், விவசாயிகள் பயிரிட்டு அறுவடைக்கு தயாராக உள்ள விளை நிலங்களுக்கு இரவு நேரங்களில் கூட்டமாக வருகின்றன. அவை பயிர்களை சேதப்படுத்திவிட்டு செல்கின்றன.
இதையடுத்து, காட்டுப்பன்றிகளின் நடமாட்டத்தை தடுக்க, விவசாயிகள் இரவு நேரங்களில் ஒலிப்பெருக்கிகள் மூலம் பல்வேறு விலங்குகளின் சத்தங்களை எழுப்பி வருகின்றனர். மேலும், வெடிகள் வெடித்தும் கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர். ஆனால், காட்டுப்பன்றிகளின் நடமாட்டத்தை குறைக்க முடியாமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்.
சில விவசாயிகள், காட்டுப்பன்றிகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க, சட்டத்திற்கு புறம்பாக மின்வேலியும் அமைக்கின்றனர். மின்வேலி அமைப்பதால், அப்பகுதிகளில் மனித உயிர்கள் பறிபோகக்கூடிய வாய்ப்பு உள்ளது.
இது குறித்து மின்வாரியத் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், 'விளை நிலங்களில் காட்டுப்பன்றிகளை விரட்ட, சில விவசாயிகள் மின் வேலியை அமைக்கின்றனர். சட்டத்திற்கு புறம்பாக மின் வேலி அமைப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
உத்திரமேரூர் ஒன்றியத்தில், காட்டுப்பன்றிகளால் நெல், கரும்பு, வேர்க்கடலை, கேழ்வரகு என, இதுவரை 200 ஏக்கருக்கு மேல் சேதமடைந்து உள்ளன.
எனவே, காட்டுப்பன்றிகளின் நடமாட்டத்தை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து வேளாண் உதவி இயக்குநர் முத்துலட்சுமி கூறியதாவது:
உத்திரமேரூர் வட்டாரத்தில் தொடர்ந்து காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதமடைந்து வருகின்றன. நெற்பயிர் கதிர் விடும் நேரத்தில் பன்றிகள் கதிர்களை கடித்து சேதப்படுத்துகின்றன.
இதனால், நெற்பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டு விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் இருந்து வருகிறது. காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்கான வழிமுறைகள் குறித்து, அவ்வப்போது விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து வனத்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:
உத்திரமேரூர் வட்டாரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில், காட்டுப்பன்றிகள் நெற்பயிரை சேதப்படுத்துவதாக விவசாயிகளிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
காட்டுப்பன்றிகளின் நடமாட்டத்தை தடுக்க முள்வேலி, வண்ணத்துணிகளை வயலை சுற்றி கட்டுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள, விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், சேதமடைந்த பயிர்களுக்கு முறையாக கள ஆய்வு செய்து இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.