/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் நெல் கொள்முதல் நிலையங்களில் கட்சி தலையீடு கூடாது: விவசாயிகள் வலியுறுத்தல்
/
காஞ்சியில் நெல் கொள்முதல் நிலையங்களில் கட்சி தலையீடு கூடாது: விவசாயிகள் வலியுறுத்தல்
காஞ்சியில் நெல் கொள்முதல் நிலையங்களில் கட்சி தலையீடு கூடாது: விவசாயிகள் வலியுறுத்தல்
காஞ்சியில் நெல் கொள்முதல் நிலையங்களில் கட்சி தலையீடு கூடாது: விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : மார் 20, 2025 08:26 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், நவரை பருவத்தில் 79,000 ஏக்கர் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் அறுவடை காலம் தற்போது துவங்கியதால், பல்வேறு இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், 95 இடங்களிலும், தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு சார்பில், 33 இடங்கள் என, மொத்தம் 128 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
இதற்கான பணிகளும் இப்போது துவங்கிவிட்டன. நெல் கொள்முதல் விவகாரத்தில், பல்வேறு விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வலியுறுத்துகின்றனர்.
விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலர் கே.நேரு கூறியதாவது:
மாவட்டம் முழுதும் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கும் இடங்களை அனைத்து விவசாயிகளும் தெரிந்து கொள்ளும் வகையில், மாவட்ட நிர்வாகம் தெரியபடுத்தவே இல்லை.
எந்தெந்த கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைகிறது என, விளம்பரபடுத்த வேண்டும். நிலையங்கள் எங்குள்ளது என தெரியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
அதேபோல, ஆளுங்கட்சியினர் தலையீடும், ஊராட்சி தலைவர்கள் தலையீடும் பல இடங்களில் அதிகரிக்கிறது. அதை இப்போதே தடுக்க வேண்டும்.
தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பினர் கொள்முதல் செய்யும் நெற்பயிருக்கு விரைவாக பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, நெல் மூட்டைக்கு கூடுதலாக பணம் கேட்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.