/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி ஊராட்சிகளில் 'பயோ காஸ்' திட்டம் அமல்படுத்த கோரி விவசாயிகள் கொந்தளிப்பு
/
காஞ்சி ஊராட்சிகளில் 'பயோ காஸ்' திட்டம் அமல்படுத்த கோரி விவசாயிகள் கொந்தளிப்பு
காஞ்சி ஊராட்சிகளில் 'பயோ காஸ்' திட்டம் அமல்படுத்த கோரி விவசாயிகள் கொந்தளிப்பு
காஞ்சி ஊராட்சிகளில் 'பயோ காஸ்' திட்டம் அமல்படுத்த கோரி விவசாயிகள் கொந்தளிப்பு
ADDED : நவ 23, 2024 12:44 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், மாவட்ட கலெக்டர் வளாக கூட்டரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டரங்கு வெளியே, வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி காட்சிப்படுத்தி இருந்தனர். விவசாயிகள் பலரும் ஆர்வத்துடன், திட்டங்கள் பற்றி பார்த்தனர்.
இதைத் தொடர்ந்து நடந்த விவசாயிகள் நலன் காக்கம் கூட்டத்தில், முத்தியால்பேட்டை கூட்டுறவு சங்கத்தின் வாயிலாக, ஆறு விவசாய பயனாளிகளுக்கு 4.69 லட்சம் ரூபாய் மதிப்பில் பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, விப்பேடு கூட்டுறவு சங்கத்தின் வாயிலகா, நான்கு விவசாயிகளுக்கு 1.44 மதிப்பில் கால்நடை பராமரிப்புக் கடன்களும், வேளாண்மை துறை சார்பில், ஐந்து பேருக்கு பசுந்தாள் உர விதைகளையும், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் வழங்கினார்.
கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்ததாவது:
* பாலாற்றின் குறுக்கே பழையசீவரம் பகுதியில் மட்டுமே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. உத்திரமேரூர் சட்டசபை தொகுதியில் வெங்குடி பகுதியிலும், காஞ்சிபுரம் சட்டசபை தொகுதியில் வெங்கடாவரம் பகுதியிலும் தடுப்பணை கட்டப்படாமலேயே உள்ளது. அறிவிப்பு வெளியாகி பல ஆண்டுகளாகியும் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.
* மாவட்டம் முழுதும் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளது. கரும்பு, நெல், வேர்க்கடலை போன்ற பயிர்களை கூட்டமாக வந்து நாசம் செய்கின்றன.
காட்டுப்பன்றிகளை சுட்டு தள்ள வேண்டும். வனத்துறை நடவடிக்கை போதிய அளவில் இல்லை. விவசாயிகளுக்கு இழப்பீடு பெற அலைய வேண்டியுள்ளது.
* விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் அளிக்கும் மனுக்களுக்கு பல துறைகளில் நடவடிக்கை இல்லை. குறிப்பாக, காஞ்சிபுரம் மாநகராட்சியில் கோரிக்கை மனு ஏற்கப்பட்டதாக பதில் அளிக்கின்றனர். ஆனால், நடவடிக்கை எடுப்பதில்லை.
* காஞ்சிபுரம் மாவட்டத்தில், 'பயோ காஸ்' திட்டத்தை முழு அளவில் செயல்படுத்த வேண்டும். மாட்டு சாணம் அதிகளவில் கிடைப்பதால், பல ஊராட்சிகளில் பயோ காஸ் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதன் வாயிலாக, எரிவாயு அதிகளவில் கிடைக்கும்.
* தனியார் கடைகள் பலவற்றில் தரமான, முளைப்புத்திறன் கொண்ட விதைகள் விற்பதில்லை. தரமான விதைகள் விற்கப்படுகிறதா என, வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும்.
* தேனீ வளர்ப்பு பிற மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், தேனீ வளர்ப்பு பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி கொடுத்ததாக தெரியவில்லை.
விவசாயிகளின் பொருளாதாரத்தை உயர்த்த தேனீ வளர்ப்பு பற்றி விழிப்புணர்வு மற்றும் பயிற்சி வழங்க தோட்டக்கலை துறை மற்றும் வேளாண் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* மாவட்டம் முழுதும் பரவலாக கரும்பு சாறு குடிப்போர் அதிகரித்து வருகின்றனர். இதனால், மகளிர் குழு வாயிலாக, நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலைகளில் கரும்பு சாறு அதிகளவில் விற்பனை செய்ய ஊக்கப்படுத்த வேண்டும்.
இதனால், மகளிருக்கும் வருவாய் கிடைப்பதோடு, கரும்பு விளைச்சலும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.