/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கலெக்டர் ஆபீசில் தீக்குளிப்பு முயற்சி தொடர்வதால் பாதுகாப்பு பணிக்கு தீயணைப்பு ஊழியர் நியமனம்

ADDED : அக் 07, 2025 01:49 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கும்போதெல்லாம், மனு அளிக்க வருவோர் தீக்குளிக்க முயலும் சம்பவங்கள் தொடர்வதால், பாதுகாப்பு பணிக்கு, தீயணைப்பு ஊழியரை மாவட்ட நிர்வாகம் நியமித்துள்ளது.
காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமை யில், வாரந்தோறும் திங்கள் கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடந்து வருகிறது.
இக்கூட்டத்திற்கு வருவோர், தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து செல்கின்றனர். சிலர் தங்கள் கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என, மறியல் செய்வது, தீக்குளிப்பது போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.
இதில், தீக்குளிக்க முயற்சி செய்யும் சம்பவங்கள், ஆறு மாதங்களில் பல முறை நடந்துள்ளது. கடந்த வாரம் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்திலும், நில பிரச்னை தொடர்பாக ஜான்போஸ்கோ, 53, என்பவர் தீக்குளிக்க முயன்றார். போலீசார் சிரமப்பட்டு அவரை காப்பாற்றினர்.
கலெக்டர் வளாகத்தில் பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே அடிக்கடி தீக்குளிப்பு சம்பவங்கள் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், கலெக்டர் அலுவலக பாதுகாப்பு பணியில், தீயணைப்பு கருவியுடன், தீயணைப்பு ஊழியரை, மாவட்ட நிர்வாகம் நியமித்துள்ளது.
குறைதீர் கூட்டம் நடக்கும் கூட்டரங்கு வெளியே, தயாராக நிற்கும் தீயணைப்பு துறை ஊழியர், தீக்குளிக்க முயலும் நபர்களை உடனடியாக காப்பாற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
குறைதீர் கூட்டம் நடக்கும் திங்கள் தோறும், தீயணைப்பு வீரர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.