/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காவாந்தண்டலம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
/
செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காவாந்தண்டலம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காவாந்தண்டலம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காவாந்தண்டலம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : டிச 05, 2024 11:37 PM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த காவாந்தண்டலம் ஏரிக்கு வெங்கச்சேரியில், செய்யாற்றின் குறுக்கே, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக அணைக்கட்டு கட்டப்பட்டது.
அணைக்கட்டில் இருந்து தண்ணீர் செல்வதற்கான கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. கடந்த 2021ல் செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, அணைக்கட்டின் அடிப்பகுதி, கால்வாயின் தடுப்புச்சுவர் உள்ளிட்டவை சேதமடைந்தன.
இதனால், அணைக்கட்டில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மீண்டும் ஆற்றிற்கே செல்கிறது. உடைப்பு ஏற்பட்ட கால்வாய் தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
நீர்வள ஆதாரத்துறையினர், கால்வாய் மற்றும் அணைக்கட்டு சேத பகுதிகளை சீரமைக்க, 12 கோடி ரூபாய் கேட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளனர். ஆனால், நிதி ஒதுக்கவில்லை என, அதிகாரிகள் புலம்பி வருகின்றனர்.
இதற்கிடையே, காவாந்தண்டலம் ஏரிக்கு தண்ணீர் செல்ல வழியில்லை என, விவசாயிகள் கவலை தெரிவித்து வந்தனர். கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால், கடந்த ஆண்டுகளில் காவாந்தண்டலம் ஏரியும் நிரம்பவில்லை. இந்த ஆண்டு பருவமழை துவங்குவதற்கு முன்பாக, நீர்வள ஆதாரத்துறையினர், கால்வாயை சீரமைத்தனர்.
இந்நிலையில், செய்யாற்றில் இருகரை தொட்டு செல்லும் வெள்ளப்பெருக்கால், காவாந்தண்டலம் ஏரிக்கு தண்ணீர் செல்ல துவங்கியுள்ளது. கால்வாயின் கரைகள் உடைந்திருந்தபோதும், வெள்ளப்பெருக்கு காரணமாக ஏரிக்கு தண்ணீர் செல்கிறது.
செய்யாற்றில் நீர்வரத்து முற்றிலும் குறைவதற்கு முன்பாக, காவாந்தண்டலம் ஏரி நிரம்ப வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.